திமுகவில் ராஜீவ் காந்தி பதவி மாற்றம் ஏன்.? நடந்தது என்ன.....

 


திமுக மாணவர் அணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய மாணவர் அணிச் செயலாளராக ஈரோடு வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார். திமுகவின் வரலாற்றில் மாணவர் அணிக்கு பெண் ஒருவர் முதல் முறையாக மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் அணிச் செயலாளராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, 2021 ஜனவரியில் திமுகவில் இணைந்தார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. அதனால் ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா உள்ளிட்டோர், ராஜீவ் காந்தி திமுகவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணையும் போது உடன் இருந்தனர்.இதன் பின்னர் 2022-ம் ஆண்டு திமுகவின் மாணவர் அணியின் செயலாளராக சிவிஎம்பி எழிலரசன், மாணவர் அணித் தலைவராக ராஜீவ் காந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

2025-ம் ஆண்டு திமுகவின் மாணவர் அணி செயலாளராக ராஜீவ் காந்தி நியமிக்கப்பட்டார். மாணவர் அணிச் செயலாளராக இருந்த சிவிஎம்பி எழிலரசன், திமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார்.திமுகவில் மாணவர் அணிக்கு ராஜீவ் காந்தி நியமிக்கப்பட்ட போதே பொதுச்செயலாளர் துரைமுருகன், ”திமுகவில் இருப்பவர்களுக்கே மாணவர் அணி செயலாளர் பதவி கொடுக்கப்படுவது வழக்கம்.. நான் இருந்தேன்.. திருச்சி சிவா இருந்தார்.. கடலூர் புகழேந்தி இருந்தார்.. தற்போது எழிலரசன் இருக்கிறார்.. எழிலரசின் தாத்தா மூத்த கழக முன்னோடி சிவிஎம் அண்ணாமலை.. அதனால் ராஜீவ் காந்திக்கு வேறு பொறுப்பு வேண்டுமானால் கொடுக்கலாம் என சொல்லிப் பார்த்தார்” என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

திமுகவில் மாணவர் அணிக்கு பொறுப்பாளரான துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவும் இதே கருத்தை தெரிவித்திருந்தார்.இந்நிலையில் திருவாடனை தொகுதியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக அங்கேயே குடியேறினார். ராஜீவ் காந்தி கோவை செல்லும் போது, விமான நிலையத்தில் அவரை மாணவர்கள் அணி நிர்வாகிகள் கூட்டமாக வந்து வரவேற்று பல கார்கள் பின் தொடர அழைத்துச் செல்வர்.

அத்துடன், ”திமுகவில் எனக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரால் பதவி கிடைத்தது” என ராஜீவ் காந்தி வெளிப்படையாகவே பேசியிருந்தார்.

மேலும், கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக ராஜீவ் காந்தி பெயரை உதயநிதி ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார். ஆனால் மண்டல பொறுப்பாளரான செந்தில் பாலாஜி, ”அப்பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவரையே தேர்தலில் வேட்பாளராக நிறுத்தினால் நல்லது” என உதயநிதியிடம் நேரிலேயே சொல்லி இருந்தார்.இந்த நிலையில் மாணவர் அணியின் செயலாளராக நியமிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததால் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை தாம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதாக ராஜீவ் காந்தி சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.

அதே நேரத்தில், ”திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” என திமுக தலைமை கழகத்தின் அறிவிப்பும் வந்தது.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, முதல்வர் ஸ்டாலினிடம், “மாணவர் அணியின் புதிய செயலாளராக துணைச் செயலாளராக இருக்கும் வீரமணியையே நியமிக்கலாம்” என கூறியிருந்தார். இதனையடுத்து திமுகவின் மாணவர் அணியின் புதிய செயலாளராக ஈரோடு வீரமணி நியமிக்கப்பட்டார். திமுகவின் வரலாற்றில் முதல் முறையாக மாணவர் அணிக்கு பெண் ஒருவர் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதனிடையே ராஜீவ் காந்தி பதவி பறிக்கப்பட்டதா? அவருக்கு திமுகவில் பதவி உயர்வு கொடுக்கப்பட்டதா? என்கிற விவாதம் சோசியல் மீடியாவில் பேசுபொருளாகி இருக்கிறது.

இது தொடர்பாக திமுக மாணவர் அணி நிர்வாகிகளிடம் நாம் பேசிய போது, மாணவர் அணியில் பெண் நிர்வாகிகள் சிலர் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருப்பதாக ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகியோருக்கு புகார்கள் போனது.

இந்த அதிர்ச்சி புகார்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு உண்மை என உறுதி செய்து கொண்டது கட்சித் தலைமை.

ராஜீவ் காந்தியால் பாதிக்கப்பட்ட சிலர், பொதுவெளியில் வெளிப்படையாக பேசவும் தயாராக இருக்கின்றனர் என்கிற தகவலும் திமுக தலைமைக்கு போனது. சட்டப்பேரவைத் தேர்தல் நேரம் என்பதால் கட்சி தலைமை இந்த மாற்றங்களை செய்துள்ளது” என்றனர்.திமுக மாணவர் அணியின் மாநிலச் செயலாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள வீரமணி, ஈரோட்டைச் சேர்ந்தவர். கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரத்தினசாமியின் மகள் வீரமணி என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments