இருகைகள் தட்டினால் தான் ஓசை வரும் அதிமுக குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து

 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வருகிற பாராளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். கட்சி தலைமை அனுமதித்தால் போட்டியிடுவேன். அ.தி.மு.க.வில் யார் தலைமை என்பதை விட அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என்பதை கூறிக்கொள்கிறேன்.

 பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் பார்த்து செல்கின்றனர். 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்பது எதிலும் இல்லை. இட ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என பலதரப்பினரும் உள்ளனர். இந்த இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்த இடஒதுக்கீட்டை தமிழகத்தில் உடனடியாக அமலுக்கு கொண்டு வரவேண்டும். பாராளுமன்ற தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை செய்து வருகிறோம். அ.தி.மு.க. நான்கு பிரிவுகளாக பிரிந்து இருப்பதாக கூறுகிறீர்கள். இருகைகள் தட்டினால் தான் ஓசை வரும். எனவே அவர்கள் இணைவது நல்லது. அவ்வாறு இணைந்தால் கூட்டணி இன்னும் பலம் பெறும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டணிகளை நம்பியே உள்ளது. தனியாக தேர்தலை சந்திப்போம் என எந்த கட்சியும் சொல்ல முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு கட்சி தொடங்கினால் கூட்டணியை வைக்ககூடாது என சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். கூட்டணியாக இருந்தால் பலமாக இருக்கும். கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டுமே. கொள்கை அளவில் யாரும் யாருடனும் கூட்டணி கிடையாது. கவர்னரை எந்த ஒரு செயலை செய்யவும் நிர்பந்தித்தால் அது சரியாகாது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும், முன்னாள் பிரதமர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதையும் கவனிக்க வேண்டும். எனவே இதில் இருதரப்பினரையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் சிகிச்சை குறைபாடு உள்ளது என்பதை மறுக்க முடியாது. அந்த மருத்துவமனையில் அதற்கான வசதிகள் இருந்ததா? என்பதை ஆராய வேண்டும். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த சம்பவம் காங்கிரஸ் உட்கட்சி பிரச்சினை. அதுகுறித்து கருத்து கூற முடியாது.என இவ்வாறு பேசினார்.



Post a Comment

0 Comments