ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, அரசத்தூரைச் சேர்ந்தவர் சுப்பு (68). இவர் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி பகரைன் நாட்டிற்குச் சென்றார். அங்கு கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக அவரது பாஸ்போர்ட்டை வைத்திருந்த நபர் உயிரிழந்தார். இதனால் ஆவணங்கள் இன்றி நாடு திரும்ப முடியாமல் சுப்பு கடந்த கால் நூற்றாண்டாக அங்கேயே தவித்து வந்தார்.
தன்னுடைய மூன்று மகள்களான ஜீவா, ராதா மற்றும் அனுசியா ஆகியோரின் திருமணத்திற்கு கூட வர முடியாமல் உழைத்து வந்த சுப்பு, கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி உடல்நலக்குறைவால் பகரைனில் காலமானார்.
சுப்புவின் மறைவுச் செய்தியை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் பகரைன் வாழ் தமிழ்ச் சங்கத்தினர், உடலைத் தமிழகத்திற்குக் கொண்டு வரப் பல முயற்சிகளை எடுத்தனர். இருப்பினும், முறையான ஆவணங்கள் இல்லாததால் 7 நாட்களுக்கு மேலாக உடலைக் கொண்டு வருவதில் கடும் சிக்கல் நீடித்தது.
இந்நிலையில், இக்கட்டான சூழல் குறித்து முன்னாள் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை அவர்களுக்குத் உறவினர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, பகரைன் நாட்டுத் தூதரகத்தின் வாயிலாகத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினார். அவரது துரித முயற்சியால் சட்டச் சிக்கல்கள் களையப்பட்டு, தற்போது சுப்புவின் உடல் சொந்த ஊரான அரசத்தூருக்குக் கொண்டு வரப்பட உள்ளது.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தந்தையின் உடலைப் பார்க்கப் போகும் சோகத்திலும், உதவி செய்தவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் சுப்புவின் மகள்.
"எங்கள் தந்தையை உயிருடன் பார்க்க முடியவில்லை என்றாலும், அவரது உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வர உதவிய அண்ணாமலை அண்ணனுக்கு நாங்கள் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளோம்,"
என அவர் விம்மிய குரலில் உருக்கமாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments