திருவாடானை அருகே பரபரப்பு: ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகக் கூறி தாய், மகன் தீக்குளிக்க முயற்சி

 


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, சமூகப் புறக்கணிப்புக்கு ஆளானதாகக் கூறி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தாய் மற்றும் மகன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாடானை அடுத்துள்ள தளிர்மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜெயராணி (70) மற்றும் மகன் பாபு (34). இவர்களது கிராமத்தில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழா வரும் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்காக ஊர் பொதுமக்களிடம் வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், ஜெயராணி குடும்பத்தினரிடம் மட்டும் விழா வரி வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

​இதன் மூலம் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாபு மற்றும் ஜெயராணி தரப்பில் தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தப் புகார் மீது காவல்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

காவல்துறையின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, இன்று காலை திருவாடானை தாலுகா (வட்டாட்சியர்) அலுவலகத்திற்கு வந்த இருவரும் அதிகாரிகளிடம் முறையிடக் காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆத்திரமடைந்த அவர்கள், மறைத்து வைத்திருந்த பெட்ரோலை திடீரென தங்கள் உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

அங்கிருந்த அரசு அலுவலர்களும், பொதுமக்களும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தி, உடலில் தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர், இருவரும் சிகிச்சைக்காக உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட தாலுகா அலுவலகத்திலேயே தாய் மற்றும் மகன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments