திருவாடானையில் வாக்கு ரகசியம் அம்பலம்..... வாட்ஸ்அப்பில் கசிந்த தபால் வாக்கு புகைப்படம்.....



ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தபால் வாக்கு ஒன்றின் புகைப்படம் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கசிந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், தமிழக வெற்றி கழகம், அனைத்திந்திய பார்வர்ட் பிளாக் என முக்கியக் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 21 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் அனைவரும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், அரசு ஊழியர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

​வாக்கு ரகசியம் மீறல்:

தேர்தல் விதிகளின்படி ஒரு நபர் யாருக்கு வாக்களித்தார் என்பது ரகசியமாக வைக்கப்பட வேண்டும். ஆனால், திருவாடானை தொகுதியில் தபால் வாக்கு செலுத்திய நபர் ஒருவர், தான் வாக்களித்த தாளினைப் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது பல்வேறு குழுக்களில் வேகமாகப் பகிரப்பட்டு பொதுவெளியில் கசிந்துள்ளது.

வாக்கு ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் விதிகள் மீறப்பட்டிருப்பதும், தபால் வாக்கு செலுத்திய விவரம் கசிந்திருப்பதும் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பு அதிமுகவிற்கு வாக்கு செலுத்தியதாக அதில் டிக் செய்யப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments