ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவொற்றியூர் அருகே உள்ள புல்லுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகன் கோவிந்தன் என்ற சக்திவேல் (51). இவர் அப்பகுதியில் நெல் வியாபாரம் மற்றும் பல்வேறு தொழில்களைச் செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை இவரது வீட்டிற்கு மர்ம நபர்கள் வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதமும், கைக்கலப்பும் ஏற்பட்டுள்ளது. அந்த நபர்கள் சக்திவேலை அடித்து கீழே தள்ளிவிட்டு, அவரது காரைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது சக்திவேல் உடல் அசைவின்றிக் கிடந்துள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர், சக்திவேல் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
இதுகுறித்து தொண்டி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், சக்திவேலின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தொண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, வியாபாரி சக்திவேலின் மரணம் கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரைத் தாக்கிவிட்டு காரைத் திருடிச் சென்ற 3 மர்ம நபர்களையும் வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments