ரயில் பாதையில் ஆடு,மாடுகள் குறுகிட்டால் அபராதம்;ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை


சென்னை--ரயில் பாதைகளில் ஆடு, மாடுகள் குறுக்கிட்டு மோதினால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு, 6,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ரயில்களின் பாதைகளில் ஆடு, மாடுகள் போன்ற விலங்குகள், திடீரென குறுக்கே சென்று, விபத்து ஏற்படுகின்றன. இதனால், ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்படுகின்றன. சில நேரங்களில் ரயில்கள் தடம் புரளும் அபாயமும் இருக்கிறது. இதற்கிடையே, ரயில் பாதைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் தடுப்புச் சுவர்கள் அல்லது தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்த வேலிகளை உடனடியாக அமைப்பதில் சிக்கல் இருக்கிறது.சமீபத்தில், தென் மாநிலங்களில் முதன்முறையாக, சென்னை சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம் மைசூரு இடையே துவங்கப்பட்ட 'வந்தே பாரத்' ரயில் சேவை, பயணியரிடம் வரவேற்பை பெற்று வருகிறது. மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் சென்றாலும், முக்கிய வளைவு பகுதிகளில், மணிக்கு 75 முதல் 90 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, 17ம் தேதி அரக்கோணம் அருகே வந்தபோது, கன்றுக்குட்டி ஒன்று திடீரென ரயில் பாதை குறுக்கே வந்தது. இந்த ரயில் மோதியதில் கன்றுக்குட்டி இறந்தது.

ரயிலின் முகப்பு பகுதியில் சிறு சேதம் ஏற்பட்டது. இதனால், சில நிமிடங்கள் நிறுத்தப்பட்ட, வந்தே பாரத் ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. வந்தே பாரத் ரயில்களில் அடிக்கடி மாடுகள் மோதும் சம்பவம், பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ஆடு, மாடுகள் ரயில் பாதைகளை கடந்து செல்வதை தடுக்க, சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறோம். ரயில்வே சட்டத்தின் படி, ரயில் பாதைகளில் ஆடு, மாடுகள் குறுக்கிட்டு மோதினால், உரிமையாளர்களுக்கு 3,000 முதல் 6,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இது குறித்து, ஆடு, மாடுகளின் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Post a Comment

0 Comments