நாமக்கல் அருகே 4 ஆயிரம் வாழை மரங்களை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள் - MAKKAL NERAM

Breaking

Sunday, November 12, 2023

நாமக்கல் அருகே 4 ஆயிரம் வாழை மரங்களை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள்

 


நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் பகுதியில் வீடுகள், வெல்ல ஆலையில் இருந்த டிராக்டர்கள், வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்டகைகள் உள்ளிட்டவைகளுக்கு தீ வைப்பு, குடியிருப்பில் மண்எண்ணெய் பாட்டில் வீச்சு, விவசாய கருவிகள், வாழை, பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவங்கள் என தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தன.


இதனை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் அந்த பகுதியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.


இதற்கிடையில் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் ஜேடர்பாளையம் அருகே சின்னமருதூர் பகுதியில் தோப்பில் இருந்த 2,600-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களையும், கொத்தமங்கலம் பகுதியில் தர்மலிங்கம், நல்லசிவம், புலவர் சுப்பிரமணி ஆகியோருக்கு சொந்தமான தோப்பில் புகுந்த மர்மநபர்கள் 1,500-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் வெட்டி சாய்த்தனர். மேலும் வக்கீல் சுப்பிரமணி தோட்டத்தில் இருந்த 200-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள், வாழை மரங்களையும் மர்மநபர்கள் வெட்டி சேதப்படுத்தினர்.


இந்தநிலையில் நேற்று இரவு ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையத்தை சேர்ந்த இளங்கோமணி என்கிற சுப்பிரமணியின் 5 ஏக்கர் நிலத்தில் இருந்த சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.


இந்த சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்களை வெட்டி சாய்த்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. மேலும் அங்கு வரவழைக்கப்பட்ட மோப்பநாய் வாழை மரங்கள் வெட்டப்பட்ட பகுதியில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது.


வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment