• Breaking News

    மிக்ஜாம் புயலால் பாதித்த சிறு வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

     


    மழையில் பாதிக்கப்பட்ட சாலையோர சிறு வியாபாரிகளுக்கு கூட்டுறவுத்துறை சார்பில் சிறப்பு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.



    மிக்ஜாம்  புயலால் சென்னை மாநகர் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஏழை, பணக்காரர்கள்,  தனியார், அரசு நிறுவனங்கள்,  சிறு தொழில் நிறுவனங்கள்,  சாலையோர வியாபாரிகள் என எல்லா தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


    புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு மற்றும்  நிவாரணப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சாலையோர சிறு வியாபாரிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் சிறப்பு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். 



    "கூட்டுறவு வங்கிகளில் நடைபாதை வியாபாரிகளுக்கு, 10,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் சிறு வணிக கடன் வழங்கப்படுகிறது. இதை மழையால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், சிறப்பு கடன் திட்டங்கள் அறிவிக்க, முதல்வருடன் ஆலோசனை நடத்தப்படும்" என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.

    No comments