நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற சந்தேகம் நீண்ட நாட்களாகவே அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த சந்தேகத்திற்கு எல்லாம் விடை சொல்லும் விதமாக கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி, 'தமிழக வெற்றி கழகம்' எனத் தனது கட்சியை அறிவித்தார். ஊழலற்ற மற்றும் சாதி, பேதமற்ற கட்சி என்பதுதான் தனது நோக்கம் என்பதையும் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும், வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் கூறினார். வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு எனக் கூறிய விஜய், இந்த இரண்டு ஆண்டுகளில் கட்சியை பலப்படுத்தப் போவதாகவும் கூறினார்.
முழுநேரக் கட்சிப் பணியில் இறங்குவதற்காகத் தற்போது நடித்து வரக்கூடிய ‘GOAT' திரைப்படம் மற்றும் ‘தளபதி 69’ படத்தினை மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவை விட்டு விலகப் போகிறேன் எனவும் கூறினார். இதுபோன்ற சூழலில்தான் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் 'க்' என்ற எழுத்துப் பிழை இருப்பதாக எழுந்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். இதனால், இனி அவரது கட்சி தமிழக வெற்றிக் கழகம் (முன்பு தமிழக வெற்றி கழகம்) என மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments