திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, சீமானுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், ’கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012-ம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீஸார் வழக்கை முடித்து வைத்தனர். ஆனால் தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார்.இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில், ”ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பெங்களூருவில் வசித்து வரும் நடிகை விஜயலட்சுமிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை, இன்று ஆஜராகவும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ”நீதிமன்றத்தில் ஆஜராக விரும்பாவிட்டால் இந்த மனுவை ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, விஜயலட்சுமி ஆஜராக மேலும் ஒரு அவகாசம் வழங்குவதாகக் கூறி, விசாரணையை ஏப்ரல் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் நேரில் ஆஜராக முடியாவிட்டால் காணொலி காட்சி மூலமாகவும் ஆஜராகலாம் எனவும் அனுமதியளித்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment