• Breaking News

    முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு...... விவசாயிகளையும்,பத்திரிகையாளர்களையும் அணை பகுதிக்கு அனுமதிக்க கோரிக்கை


    தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மத்திய குழுவினர் முல்லைப் பெரியாறு அணை பகுதியினை ஆய்வு செய்து பார்வையிட சென்றனர். 

    அப்போது பத்திரிகையாளர்களை செய்தி சேகரிக்க உள்ளே அனுமதிக்கவில்லை எனவும் மாலை நேரத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகளிடம் கருத்து கேட்க விவசாயிகளை அழைத்து அவர்களின் கோரிக்கைகளை கேட்க வேண்டும் என வலியுறுத்தியும் கம்பம் நகரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள பெரியார் உட்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒன்று கூடிய விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் முல்லைப் பெரியார் வைகை பாசன விவசாய சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் மாநில பொதுச் செயலாளர் ஆதிமூலம் தலைமையில் ஒன்று கூடி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த விவசாய சங்கத்தினர் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு செய்யும் பொழுது பத்திரிக்கையாளர்களை மதிக்காமலும் மற்றும் விவசாயிகளை சந்திக்காமலும் சென்றது கண்டனத்துக்குரியது.இவ்வாறு தொடர்ந்து விவசாயிகளையும் பத்திரிகையாளர்களையும் மத்திய குழுவினர் புறக்கணித்து வந்தால் வரும் காலங்களில் முற்றுகை போராட்டங்கள் நடத்துவோம் என தெரிவித்தனர்.

    மேலும் இனிவரும் காலங்களில் விவசாயிகளையும் பத்திரிகையாளர்களையும் முல்லைப் பெரியாறு அணை ஆய்வின்போதும் ஆய்வுக் கூட்டங்களின் போதும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவினை உதவி செயற் பொறியாளர் குமாரிடம் வழங்கி விட்டுச் சென்றனர்.இதனால் பொதுப்பணி துறையினர் அலுவலகம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    No comments