• Breaking News

    டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு..... ஜல் போர்டு அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பாஜகவினர்....?

     

    டெல்லியில் கடந்த சில மாதங்களாக கடும் தண்ணீர் பிரச்சனை நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு எதிர்க்கட்சியான பாஜக இப்பிரச்சினையை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், சத்தர்பூரில் உள்ள டெல்லி ஜல் போர்டு (டிஜேபி) அலுவலகத்தை அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

    சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில், டிஜேபி அலுவலகத்தில் உடைந்த ஜன்னல் கண்ணாடி மற்றும் மண் பானைகளை காண முடிகிறது. இந்த சம்பவத்தின் மற்றொரு காணொளியை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.அதில், நாச வேலைகளில் ஈடுபட்டவர்கள் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அந்த வீடியோவில் ஒருவர் பாஜக அடையாளத்தை கொண்டிருப்பதாகவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லி ஜல் போர்டு அலுவலகத்தை பாஜக தொண்டர்கள் எப்படி உடைக்கிறார்கள் என்பதை பாருங்கள்.

     ஒருபுறம், ஹரியாணா பாஜக அரசு, டெல்லியின் உரிமைப் பங்கு தண்ணீரைத் தடுக்கிறது. மறுபுறம், பாஜக டெல்லி மக்களின் சொத்துகளை சேதப்படுத்துகிறது.” என தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக பாஜக தலைவர் ரமேஷ் பிதுரி கூறுகையில், “இது இயற்கையானது. மக்கள் கோபமாக இருக்கும்போது எதையும் செய்யமுடியும். அந்த மக்களைக் கட்டுப்படுத்திய பாஜகவினருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். அது அரசு மற்றும் மக்களின் சொத்து. இந்தச் சொத்தை சேதப்படுத்துவதால் எந்தப் பலனும் இல்லை” என்றார்.

    இதற்கிடையே அதிகரித்து வரும் நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில், டெல்லி நீர் வழங்கல் துறை அமைச்சர் அதிஷி, போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ' நாசவேலைகளில் இருந்து பாதுகாக்க தண்ணீர் குழாய்கள் உள்ள முக்கிய பகுதிகளில் போலீஸாரை பணியமர்த்த வேண்டும். தெற்கு டெல்லியில் உள்ள ஒரு முக்கிய பைப்லைனை வேண்டுமென்றே சேதப்படுத்திய சம்பவம், தண்ணீர் பற்றாக்குறையை அதிகப்படுத்தியது' என அவர் தெரிவித்துள்ளார்.

    No comments