புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 1,2 களின் சார்பில் உலக யோகா தின விழா நடைபெற்றது.
கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்ற விழாவிற்குக் கல்லூரி முதல்வர் (பொ) பேராசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். ஆங்கிலத் துறைத்தலைவர் கணேசன், வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் சீனிவாசன், கணிதவியல் துறைத் தலைவர் முனைவர் கிளாடிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட யோகக்கலை ஆசான் யோகி அஜய்குமார்கோஷ் , "உலகமெங்கும் வளர்ச்சியடைந்துள்ள யோகக் கலையின் பிறப்பிடம் தமிழகமே. தமிழ் முனிவர்களே இக்கலைக்கான மூலகர்த்தாக்கள். உடலையும் மனதையும் நெறிப்படுத்தக்கூடிய யோகப்பயிற்சியினால் மனிதர்களுடைய நினைவாற்றல் அதிகரிக்கும்.நோய்த்தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். மூச்சுப்பயிற்சிதான் யோகக்கலையின் அடிப்படை. மூச்சு விடும் முறையைக்கொண்டே நம்முடைய வாழ்நாள் நீடிக்கும். யோகக்கலை குறித்து விரிவாகப் பேசும் திருமந்திரத்தை மாணவர்கள் தவறாது வாசிப்பதோடு, தங்கள் இல்லங்களிலும் வாங்கி வைத்து படித்தறிந்து அதன் வழி வாழ முற்பட்டால் எப்போதும் நமக்கு யோகமே" எனச் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து அவர் சில யோகாசனங்களை மாணவர்களிடையே செய்து காட்டி , விளக்கம் கொடுத்தார்.
இவ்விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், நாட்டு நலப்பணித்திட்டத்தைச் சார்ந்த 150 தன்னார்வல மாணவர்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர். முன்னதாகக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பழனித்துரை அனைவரையும் வரவேற்றார். நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் ரமேஷ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment