பூகம்பத்தை கிளப்பிய பாஜகவின் மசோதா..... ' லவ் ஜிகாத்'க்கு ஆயுள் தண்டனை..... - MAKKAL NERAM

Breaking

Tuesday, July 30, 2024

பூகம்பத்தை கிளப்பிய பாஜகவின் மசோதா..... ' லவ் ஜிகாத்'க்கு ஆயுள் தண்டனை.....

 

பாஜக அரசு கொண்டு வரும் சட்டங்கள் தொடர் சர்ச்சையை கிளப்பி வருகின்றன. அது மத்திய பாஜக அரசாக இருந்தாலும் சரி, மாநில பாஜக அரசாக இருந்தாலும் சரி. வேளாண் சட்டம் (தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது) தொடங்கி சமீபத்தில் உத்தரகாண்டில் அமல்படுத்தப்பட்ட மாநில பொது சிவில் சட்டம் வரை பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தில் 'லவ் ஜிகாத்' தொடர்பாக மாநில பாஜக அரசு கொண்டு வந்துள்ள மசோதா தற்போது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. உத்தரப் பிரதேசம் சட்ட விரோத மதம் மாற்ற தடை (திருத்தம்) மசோதா, 2024 என்ற பெயரில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு புதிய மசோதாவை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, 'லவ் ஜிகாத்' வழக்குகளில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை வழங்க வழிவகை செய்கிறது அந்த மசோதா.இந்து மதத்தை சேர்ந்த பெண்களை, இஸ்லாமிய ஆண்கள் காதல் என்ற பெயரில் ஏமாற்றி, மதமாற்றி திருமணம் செய்து கொள்வதாக இந்துத்துவ வலதுசாரிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், இதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பவே வலதுசாரிகள் இப்படி செய்தவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் 'லவ் ஜிகாத்' வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கும் முடிவுக்கு பாஜகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உத்தரப் பிரதேச துணை முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான கேசவ் பிரசாத் மவுரியா கூறுகையில், "இது போன்ற சட்டங்கள், 'லவ் ஜிகாத்' போன்ற நடைமுறைகளுக்கு எதிராக ஒரு 'தடுப்பாக' செயல்படும் என்பதால், இந்த சட்டம் வரவேற்கப்பட வேண்டும்" என்றார்.இதற்கு சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளன. "உத்தர பிரதேசத்தில ஏற்கனவே 'லவ் ஜிஹாத்' சட்டம் உள்ளது. ஏதாவது உள்நோக்கத்துடன் யாரேனும் ஒருவரை காதல் வலையில் சிக்க வைத்தால், அதற்கு ஒரு சட்டம் இருக்கிறது.

ஆனால், பாஜக எதிர்மறையான அரசியலை மட்டுமே செய்ய விரும்புகிறது. வேலையின்மை மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக எதுவும் செய்ய விரும்பவில்லை" என்றார்.

No comments:

Post a Comment