போலி ஆவணம் தயாரித்து கடன் வழங்கியதாக வங்கி அதிகாரிகள் நூதன மோசடி..... 3 மாதத்தில் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு..... - MAKKAL NERAM

Breaking

Wednesday, February 5, 2025

போலி ஆவணம் தயாரித்து கடன் வழங்கியதாக வங்கி அதிகாரிகள் நூதன மோசடி..... 3 மாதத்தில் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு.....


சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் கேசவ பாண்டியன்(37). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேச்சர் டச் குளோதிங்ஸ் மற்றும் வின்னர் டெக்ஸ்ட் டிரேடிங்ஸ் என்ற பெயரில் எக்ஸ்போர்ட் தொழில் செய்து வந்தார். இவர் தொழிலை விரிவு செய்வதற்காக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கேசவ பாண்டியணின்  வங்கி காசோலையை அவருக்கு தெரியாமல் பயன்படுத்தி அவரது வங்கி கணக்கில் இருந்து 6 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கி அதிகாரிகள் எடுத்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கேசவ பாண்டியன் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் பொது மேலாளருக்கு இமெயில் மற்றும் தொலைபேசி மூலமாக புகார் அளித்தார் .ஆனால் புகார் அளித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

தொடர்ந்து கேசவ பாண்டியன் தனது நண்பர்களிடம் விசாரித்த போது சிட்டி யூனியன் வங்கி நிர்வாகி இயக்குனருக்கு தெரிந்து இதுபோல பல நபர்களின் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது என்றும்  பாதிக்கப்பட்ட ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரமும் தெரியவந்தது. தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் வங்கியில் இருந்த தனது பணத்தை வங்கி அதிகாரிகளே கையாடல் செய்ததாக கேசவ பாண்டியன் புகார் அளித்தார்.

 புகாரின் பேரில் போலீசார் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் காமகோடி, திருச்செங்கோடு சிட்டி யூனியன் வங்கியின் பொது மேலாளர் மோகன் ,கிளை மேலாளர் குஞ்சிதபாதம் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து வங்கி கடனில்  இயந்திரங்களை வாங்கியதாக போலியான ஆவணங்களை சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகள் தயார் செய்தனர். பின்னர் அந்த இயந்திரங்களை வங்கி நிர்வாகத்திற்கு தெரியாமல் திருடி சென்று விட்டதாக சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகள் கேசவ பாண்டியன் மீது பொய்யான புகார் ஒன்றை திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் 2021 ஆம் ஆண்டு அளித்தனர். புகாரின்  பேரில் போலீசார் கேசவ பாண்டியன் மீது வழக்குப்பதிவு  செய்தனர் .

இதனால் அதிர்ச்சி அடைந்த கேசவ பாண்டியன் போலியான ஆவணங்களை குறிப்பாக கேசவ பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தாரின் கையெழுத்துகளை போலியான முறையில் போட்டு ஆவணங்களை தயாரித்து கடன் வாங்கியதாக மோசடி செய்த வங்கி அதிகாரிகள் மீது நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே கொரோனா காலகட்டத்தில் கேசவ பாண்டியன் வாங்கிய கடனுக்கு பணத்தை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை குறைந்த விலைக்கு ஏலம் விட்டு 25 கோடி ரூபாய் வரை கேசவ பாண்டியனுக்கு இழப்பு ஏற்படுத்தினர். இந்த வழக்கு கோவை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து கேசவ பாண்டியன், அவரது தந்தை ,தாய், சகோதரர் உள்ளிட்டோரின்  கையெழுத்துக்களை போலியாக போட்டு போலி ஆவணம் தயாரித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் கேசவ பாண்டியன் புகார் அளித்தார் .

புகாரின் பேரில் போலீசார் சிட்டி யூனியன் வங்கியின் திருச்செங்கோடு கிளை மேலாளர் அரவிந்த், கும்பகோணத்தில் உள்ள வங்கியின் மேனேஜர் குஞ்சிதபாதம், கும்பகோணம் கிளையின் சீனியர் மேனேஜர் கணேசன், இன்ஸ்பெக்ஷன் பிரிவு சீனியர் மேனேஜர் மகாராஜா, மண்டல மேலாளர் சுயம்புலிங்க ராஜா மற்றும் திருச்செங்கோடு கிளை மேலாளர் ராமன் ஆகிய ஆறு பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிட்டி யூனியன் வங்கி சார்பில் வழக்கிற்கு தடை கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தனர். கடந்த மார்ச் மாதம் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். கேசவ பாண்டியன் சார்பில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மதுரம் லா அசோசியேட்ஸ் எஸ்.பாஸ்கர் மதுரம் ஆஜராகி வாதிட்டார். இந்நிலையில் கடந்த வாரம் சிட்டி யூனியன் வங்கி வழக்கை போலீசார் விசாரிக்க விதிக்க பட்டிருந்த தடையை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை மூன்று மாதத்திற்குள் உரிய முறையில் நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனால் நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணையை மீண்டும் துவக்கியுள்ளனர்.இந்த வழக்கை போலீசார் சரியான முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேசவ பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment