• Breaking News

    டெல்லியின் 4-வது பெண் முதல்வர்..... ஆர்.எஸ்.எஸ்.-ன் ஆதரவுடன் பதவியேற்றார் ரேகா குப்தா

     


    டெல்லியின் 4-வது பெண் முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா இன்று பதவியேற்றார். பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ், மற்றும் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் தமது அரசியல் பயணத்தை தொடங்கிய ரேகா குப்தா இன்று தலைநகர் டெல்லியின் 9-வது முதல்வராக பதவியேற்றார்.

    டெல்லி யூனியன்பிரதேசம் நாடு விடுதலை அடைந்த பின்னர் 1952 முதல் 1955 வரை மட்டுமே முதல்வரை கொண்டிருந்தது. இதன் பின்னர் டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் பதவி என்ற அமைப்பு முறையே இல்லாமல் துணை நிலை ஆளுநரின் கீழ் நிர்வாகம் இருந்து வந்தது.

    1993-ம் ஆண்டுதான் டெல்லியில் மீண்டும் முதல்வர் பதவி உருவாக்கப்பட்டது. 1993-ல் டெல்லி முதல்வராக பாஜகவின் மதன் குலால் குரானா சுமார் 2 ஆண்டுகள் பத்வி வகித்தார். அவரைத் தொடர்ந்து பாஜகவின் சாஹிப் சிங் வர்மா 2 ஆண்டுகளுக்கு மேல் முதல்வராக இருந்தார். இந்த சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் சிங் வர்மாதான் தற்போது டெல்லியின் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


    டெல்லியின் முதலாவது பெண் முதல்வராக பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் 1998-ல் பதவியேற்றார். ஆனால் சுஷ்மா ஸ்வராஜ், 52 நாட்கள் மட்டுமே முதல்வர் பதவியில் இருந்தார். 1998-ம் ஆண்டுக்குப் பின்னர் டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கவில்லை. தற்போது 27 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது பாஜக.


    1998-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 15 ஆண்டுகாலம் டெல்லியின் முதல்வராக காங்கிரஸின் ஷீலா தீட்சித் பதவி வகித்தார். இவர் டெல்லியின் 2-வது பெண் முதல்வர். 2013-ம் ஆண்டுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி டெல்லி தேர்தல் களத்தில் இருந்தே அகற்றப்பட்டுவிட்டது.


    டெல்லியில் ஆம் ஆத்மி vs பாஜக என்ற நிலைமைதான் இருந்தது. ஆம் ஆத்மி கட்சியின் கெஜ்ரிவால் 9 ஆண்டுகாலம் முதல்வராக இருந்தார்; அவரது பதவி காலத்தின் கடைசி மாதங்களில் ராஜினாமா செய்ய டெல்லியின் 3-வது பெண் முதல்வரானார் அதிஷி. டெல்லி முதல்வராக 152 நாட்கள் பதவி வகித்தார் அதிஷி.


    தற்போது டெல்லி தேர்தலில் வென்ற பாஜகவின் 48 எம்.எல்.ஏக்கள் புதிய முதல்வராக 50 வயதாகும் ரேகா குப்தாவை தேர்ந்தெடுத்டனர். டெல்லியின் 4-வது பெண் முதல்வர் ரேகா குப்தா. டெல்லி பல்கலைக் கழகத்தில் பி.காம் பட்டப் படிப்பு படிக்கும் போதே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீதான பற்றுதலுடன் தமது அரசியல் பயனத்ததை தொடங்கினார் ரேகா குப்தா. 1992-ம் ஆண்டு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யில் இணைந்தார்.


    1995-ம் ஆண்டு டெல்லி பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது டெல்லி பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் டெல்லி தேர்தலில் தோல்வியை தழுவிய அல்கா லம்பா. இதன் பின்னர் டெல்லி பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் தலைவராகவும் வென்றார் ரேகா குப்தா.


    2000-ம் ஆண்டுகளில் பாஜகவில் இணைந்த ரேகா குப்தா, டெல்லி மாநகராட்சி கவுன்சிலராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லி பாஜக பொதுச்செயலாளர், பாஜக மகிளா மோர்ச்சா தலைவர், உ.பி. மகிளா மோர்ச்சா தேசிய துணைத் தலைவர், பாஜக யுவ மோர்ச்சா நிர்வாகி என பல பொறுப்புகளை வகித்தார் ரேகா குப்தா.


    2015-ம் ஆண்டு முதல் முறையாக டெல்லி ஷாலிமார் பாக் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கினார் ரேகா குப்தா. அந்த தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் 10,978 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் ரேகா குப்தா.


    2020-ம் ஆண்டு 2-வது முறையாக ஷாலிமார் பாக் தொகுதியில் களமிறங்கிய ரேகா குப்தா அதே ஆம் ஆத்மி வேட்பாளர் பந்தனா குமாரியை தவிக்க விட்டார், அந்த தேர்தலில் வெறும் 3,440 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் ரேகா குப்தா.


    தற்போதைய சட்டசபை தேர்தலில் ஷாலிமார் பாக் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான ஆம் ஆத்மியின் பந்தனா குமாரியை 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றியைப் பெற்றார். டெல்லி முதல்வர் பதவிக்கு பர்வேஷ் சிங் வர்மா உள்ளிட்ட பலரும் கடும் போட்டியாளர்களாக இருந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ்.-ன் ஆதரவுடன் முதல்வராக அரியாசனத்தில் அமர்ந்துள்ளார் ரேகா குப்தா.

    No comments