இந்தியா - பிரான்ஸ் நாடுகளின் நட்புறவுக்கு ஜனநாயக மதிப்புகள் தூண்களாக அமைந்துள்ளன - பிரதமர் மோடி - MAKKAL NERAM

Breaking

Wednesday, February 12, 2025

இந்தியா - பிரான்ஸ் நாடுகளின் நட்புறவுக்கு ஜனநாயக மதிப்புகள் தூண்களாக அமைந்துள்ளன - பிரதமர் மோடி

 


பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு கடந்த 10-ந்தேதி புறப்பட்டு சென்றார். அவரை அந்நாட்டு அதிபர் மேக்ரான் வரவேற்றார். இதன்பின்னர், பிரான்சின் பாரீஸ் நகரில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டில், அந்நாட்டு அதிபர் மேக்ரானுடன் ஒன்றாக பங்கேற்றார். இந்த உச்சி மாநாட்டில், உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி உரையாடினார். இதேபோன்று, பிரதமர் மோடி பாரீஸ் நகரில் நடந்த தலைமை செயல் அதிகாரிகளுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, பிரான்ஸ் உடனான வலுவான நட்புறவு மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தி இருப்பது ஆகியவற்றை பற்றி பேசினார்.

இந்த பேச்சின்போது, இந்தியாவின் நிலையான கொள்கைகள், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் தொழில் நுட்பம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் நவீனத்துவம் ஆகியவற்றையும் வலியுறுத்தி பேசினார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, இது, வர்த்தக நிகழ்ச்சி என்றில்லாமல், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் புத்திசாலித்தனம் நிறைந்த மனங்களின் ஒன்றிணைதல் ஆகும்.

புதிய கண்டுபிடிப்பு, ஒருங்கிணைத்தல் மற்றும் தரம் உயர்த்துதல், நோக்கத்துடன் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லுதல் ஆகிய மந்திரங்களை நீங்கள் ஆர்வத்துடன் பின்பற்றி வருகிறீர்கள். உள்ளரங்கத்தில் ஒருவருக்கொருவர் உரையாடி தொடர்பை ஏற்படுத்தி கொள்வது மட்டுமின்றி, அதனை கடந்து, இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான மூலோபாய நட்புறவை நீங்கள் மீண்டும் செயல்படுத்தி வருகிறீர்கள் என்றும் பேசியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையேயான ஆழம் வாய்ந்த நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட மதிப்புகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி பேசிய அவர், ஜனநாயக மதிப்புகள், புதுப்புது கண்டுபிடிப்புகள் மற்றும் மக்களுக்கு சேவையாற்றுதல் ஆகியவை நம்முடைய நட்புறவுக்கு தூண்களாக அமைந்துள்ளன என்றும் கூறியுள்ளார்.

நம்முடைய உறவுகள் இரு நாடுகள் என்றளவில் மட்டும் நின்று விடாமல், உலகளாவிய சிக்கல்களுக்கும் நாம் தீர்வுகளை அளித்து வருகிறோம் என்றும் அவர் பேசியுள்ளார்.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, சீர்திருத்தங்கள் மற்றும் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்துதல், விண்வெளி மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்றவற்றில் கவனம் செலுத்துவது பற்றியும் அவர் பேசியுள்ளார்.

இது, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான நேரம் என்று குறிப்பிட்டு பேசிய அவர், பிரெஞ்சு நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் பங்கெடுக்கும் சந்தர்ப்பத்தில் இணையும்படி அழைப்பும் விடுத்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் முடிந்து, இன்று மதியம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார்.

No comments:

Post a Comment