மதுரை: ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி சாலை மறியல் - MAKKAL NERAM

Breaking

Tuesday, March 18, 2025

மதுரை: ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி சாலை மறியல்

 


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் உள்ள கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கில் மேலூர் தொகுதி சார்பில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்தது. 1000-க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன. 650 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.3-வது சுற்றில் களமிறங்கிய மாடுபிடி வீரர் மதுரை கச்சிராயிருப்பைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் மகேஷ் பாண்டி (25) காளையை அடக்க முயன்றார். அப்போது, அவரது நெஞ்சில் காளை முட்டியதால் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார்.

 வெளிநாட்டில் பணிபுரிந்த பட்டதாரியான மகேஷ்பாண்டி தனது சகோதரியின் குழந்தை காதணி விழாவுக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தபோது, இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்று உயிரிழந்துள்ளார்.இதற்கிடையே, பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மகேஷ்பாண்டியின் உடலை வாங்க மறுத்து மதுரை அரசு மருத்துவமனை அருகே அவரது உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். உயிரிழந்த மகேஷ்பாண்டியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மகேஷ்பாண்டியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற, அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் வராததைக் கண்டித்து கோஷமிட்ட உறவினர்கள், சாலை மறியலை கைவிட மறுத்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். அப்போது கூட்டத்திலிருந்து வெளியேறிய சிலர், அங்கிருந்த காவல் துறையினரின் வாகனத்தில் கல்வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment