தென்காசி: பிரியாணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதி
தென்காசி மாவட்டம் கடையம் அருகே, பிரியாணி சாப்பிட்ட குடும்பத்தினர் திடீரென மயக்கம் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டலையூர் பகுதியில் வசிக்கும் மாடசாமி மற்றும் அவரது மகன் அழகுராஜ், நேற்று பாவச்சித்திரம் பகுதியில் உள்ள பிரபல தனியார் பிரியாணி கடையில் இருந்து ஆட்டுப் பிரியாணி வாங்கிச் சென்று வீட்டில் குடும்பத்துடன் சேர்ந்து உணவருந்தியுள்ளனர்.
அந்த நேரத்தில் அவர்களுடன் இருந்த அழகுராஜாவின் மனைவி அன்னலட்சுமி, குழந்தைகள் அசினி, ஹரிகரசுதன், ஸ்ரீராம் ஆகியோரும் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சில நேரத்திலேயே அனைவருக்கும் கடுமையான வாந்தி, மயக்கம் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்படத் தொடங்கியதால், உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தற்போது ஒன்பது பேர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வளாகத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் குறித்து தகவலறிந்த கடையம் காவல் துறை, சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை தொடங்கியுள்ளது. ஆரம்ப கட்டத்தில், அவர்கள் சாப்பிட்ட பிரியாணியே இதற்குக் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா.. என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments