• Breaking News

    நெல்லை அருகே வேன் கவிழ்ந்து விபத்து..... 10 பேர் காயம்

     


    தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அடுத்துள்ள ஆலமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் 2 வேன்களில் திருச்செந்தூர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று முன் தினம் இரவு புறப்பட்டுள்ளனர்.இதையடுத்து 2 வேன்களும் நேற்று அதிகாலை 1 மணி அளவில் நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தை கடந்தது. அப்போது அதில் ஒரு வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே உள்ள சென்டர் மீடியனில் இடித்து கவிழ்ந்தது.

    இதனால் வேனில் இருந்த பயணிகள் அலறல் சத்தம் போட்டனர். இந்த விபத்தில் வேனின் முன்பக்க கண்ணாடி அப்பளம்போல் நொறுங்கியது. இதனை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் சந்திப்பு போலீசாருக்கும், பாளை தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.வேனின் இடிபாட்டுக்குள் சிக்கியிருந்தவர்கள் முன்பக்க கண்ணாடி உடைந்ததால் அந்த வழியாக வேனில் இருந்து டிரைவர், பயணிகள் வெளியே மீட்கப்பட்டனர். இதில் வேன் டிரைவர் சங்கர் லேசான காயம் அடைந்தார்.

    இதில் வேனில் பயணித்த 2 பெண்கள், 1 சிறுவன் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்த நிலையில் உடனடியாக அவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியை துரிதப்படுத்தினர். கிரேன் மூலம் வேன் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. இந்த விபத்தினால் சுமார் 1 மணி நேரமாக வண்ணார்பேட்டை, ஸ்ரீபுரம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அந்த நேரத்தில் சாரல் மழையும் பெய்து கொண்டிருந்தது. இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. இது தொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments