தோழியிடம் புத்தகம் வாங்க சென்ற மாணவி மாயம்..... 2 நாட்கள் கழித்து கிணற்றில் சடலமாக மீட்பு.....
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகில் உள்ள பத்தமடை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்தாஸ். இவரது மூத்த மகளாகிய இசானி (வயது 15) அப்பகுதியிலுள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஜூலை 19 ஆம் தேதி, தன்னுடன் படிக்கும் மாணவியிடம் இருந்து புத்தகம் வாங்கி வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால், பல மணி நேரங்கள் கழிந்தும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் உடனடியாக தேடத் தொடங்கினர்.
இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கிணற்றில் பள்ளி சீருடை அணிந்த நிலையில் ஒரு சிறுமியின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பத்தமடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தீயணைப்பு துறையினர் உதவியுடன் அந்த சிறுமியின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. பின்னர் மாணவி இசானி தான் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி என்பது உறுதி செய்யப்பட்டது. உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதற்கட்ட போலீசார் விசாரணையில், மாணவி இசானி தன்னுடைய செல்போனை அடிக்கடி பயன்படுத்தியதாகவும், இதை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், இது தொடர்பாக அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின் உண்மை தெரியவரும். சிறுமியின் மரணம் அப்பகுதியை மிகுந்த சோகத்திலும் பரபரப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
No comments