• Breaking News

    மகன், மகள் கண்முன்னே பெண் கொடூரக்கொலை..... மர்ம கும்பல் வெறிச்செயல்

     


    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தை சேர்ந்தவர் விஜயகோபால் (வயது 38). எல்லை பாதுகாப்பு படை வீரர். தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவர் தன்னுடைய அத்தை பார்வதியின் மகளான சென்னையை சேர்ந்த ஜெர்மினை (36) திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு நிவேதா பெத்தனாட்சி (14) என்ற மகளும், திஸ்வர் (10) என்ற மகனும் உள்ளனர். இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

    கன்னிராஜபுரத்தை அடுத்த வெட்டுக்காடு பகுதியில் விஜயகோபால் தன் மனைவி ஜெர்மின் பெயரில் நிலம் வாங்கி வீடு கட்டியதாக கூறப்படுகிறது. அந்த வீட்டில் மனைவியும், குழந்தைகளும் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடலாடி கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். மகன், மகளுக்காக விஜயகோபால், மாதந்தோறும் பராமரிப்பு தொகை வழங்கி வந்ததாகவும், கடந்த 6 மாதமாக அந்த பணம் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் இரவு தனது பிள்ளைகளுடன் ஜெர்மின், உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி ஒரு கும்பல் திடீரென புகுந்தது. கையில் பயங்கர ஆயுதங்கள் வைத்து இருந்தனர். இதனால் ஜெர்மின் மற்றும் 2 குழந்தைகளும் அதிர்ச்சி அடைந்து அலறினர்.

    கண் இமைக்கும் நேரத்தில் குழந்தைகள் கண் எதிரே ஜெர்மினை, அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டிச்சாய்த்தனர். கழுத்து, கைகளில் பலத்த வெட்டு விழுந்ததால், சம்பவ இடத்திலேயே ஜெர்மின் உயிரிழந்தார். உடனே முகமூடி கும்பல் குழந்தைகளை நோக்கி அரிவாளை காண்பித்து மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    தங்கள் கண்முன் தாய் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

    யாரோ ஏவியதன் பேரில் ஜெர்மினை கொல்ல வேண்டும் என நன்றாக திட்டமிட்டு வீடு புகுந்து கூலிப்படையினர் வந்து இந்த வெறிச்செயலை அரங்கேற்றி இருக்கலாம் என்ற கோணத்தில் சாயல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அவருடைய கணவர் விஜயகோபாலை போலீசார் தொடர்பு கொண்டு கேட்டனர். அவர் சம்பவம் குறித்து அறிந்து ஊருக்கு வந்து கொண்டு இருப்பதாக போலீசாரிடம் கூறி உள்ளார். அவர் வந்ததும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். கொலைக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கவே வாய்ப்பு உள்ளதாகவும் போலீசார் கருதுகிறார்கள். வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments