நெல்லை ஆணவக்கொலை வழக்கு..... பெண்ணின் தந்தை எஸ்.ஐ. சரவணன் அதிரடி கைது.....
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் தந்தையான எஸ்.ஐ. சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த வாரம், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது உறவினரை அழைத்துச் சென்று, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் சித்த மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.
அப்போது, அங்கு பணியாற்றும் பள்ளித் தோழி டாக்டர் சுபாஷினியுடன் பேசிக் கொண்டிருந்த தருணத்தில், சுபாஷினியின் தம்பியான சுர்ஜித், கவினை வெளியில் அழைத்துச் சென்று வாளால் தாக்கிகொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த கொலை ஆணவக் கொலையாகக் கருதப்பட்டதையடுத்து, பாளையங்கோட்டை போலீசார் சுர்ஜித்தை கைது செய்து, அவரது மீது கொலை மற்றும் ஆணவக் கொலை தடுப்பு சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர், சுர்ஜித்தின் பெற்றோராக உள்ள காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது “கொலைக்கு தூண்டுதல்” என்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, டிஐஜி விஜயலட்சுமியின் உத்தரவின்பேரில் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மேலும் பல தரப்பில் விசாரணை மேற்கொள்ளும் நோக்கில், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், பெண்ணின் தந்தையான போலீஸ் எஸ்.ஐ. சரவணன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், நெல்லை காவல் ஆணையரின் உத்தரவின்பேரில், சுர்ஜித்திற்கு எதிராக குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், ஆணவக் கொலைகளை கடுமையாக எதிர்த்து, சமூகத்தில் சட்ட ஒழுங்கையும் நீதியையும் உறுதியாக நிலைநிறுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments