• Breaking News

    கள்ளக்காதல் மோகம்..... கணவனுக்கு மாதுளை ஜூஸில் விஷம் வைத்து கொன்ற மனைவி.....

     


    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரசூல் (வயது 43) ஓட்டுநராக வேலை பார்த்து வந்ததோடு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராகவும் இருந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்கல் ஊரினைச் சேர்ந்த அம்முபி (35) என்பவரை திருமணம் செய்திருந்தார். தம்பதிக்கு குடும்பத் தகராறுகள் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கடந்த ஜூலை 5ஆம் தேதி இரவு ரசூல் தனது வீட்டில் சாப்பாடு உண்ட பிறகு படுக்கச் சென்றார். அதன்பின் இரவு நேரத்தில் அவருக்கு இருமுறை ரத்த வாந்தி ஏற்பட்டது. உடனடியாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மேற்கொண்ட ரத்த பரிசோதனையில், ரசூல் சாப்பிட்ட உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரசூலுக்கு சந்தேகம் எழுந்ததால் தனது மனைவியின் செல்போனில் உள்ள தகவல்களை ஆய்வு செய்தார்.

    அந்த வேளையில், அம்முபி தொடர்ந்து லோகேஸ்வரன் (26) என்பவருடன் தொடர்பில் இருந்ததும், அவருடன் 6 ஆண்டுகளாகக் கள்ளத் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. மேலும், செல்போனில் ரெக்கார்டாக இருந்த ஆடியோவில் – ‘‘கணவருக்கு சாப்பாட்டில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்தேன். அதில் ஒன்றும் ஆகவில்லை. அதனால் மாதுளை ஜூஸிலும் கலந்தேன்’’ என அம்முபி கூறியதாக பதிவாகியிருந்தது. இந்த அதிர்ச்சி தகவலின் அடிப்படையில், ரசூல் அரூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அம்முபி மற்றும் லோகேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையின் போது, ரசூலைத் தனது உறவுக்கு இடையூறாக கருதிய இருவரும், திட்டமிட்டு ‘ஸ்லோ பாய்சன்’ முறையில் கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட ரசூல் பின்னர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனையடுத்து இந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ள நிலையில், அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments