தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபருக்கு திருமணம் ஆகி விட்டது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு வீட்டில் உள்ள படுக்கையறையில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வெளிப்பகுதியில் உள்ள ஜன்னலின் மேல் பகுதியில் இருந்து ஒருவர் செல்போன் மூலம் படுக்கை அறையில் இவர்களை படம் பிடித்தார்.
அந்த வெளிச்சம் கண்ணில் பட்டதால் திடுக்கிட்டு எழுந்த வாலிபர் வீட்டின் வெளியே சென்று பார்த்தார். அப்போது ஒருவர் அங்கிருந்து ஓடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை அந்த வாலிபர் ஆய்வு செய்தார்.
அப்போது படம் பிடித்த நபர் பாலக்கோட்டை சேர்ந்த கார்த்திக் (36) என்பது தெரியவந்தது. இதுபற்றி அந்த வாலிபர் கார்த்திக்கிடம் சென்று கேட்டார். அப்போது கார்த்திக்கின் செல்போனை வாங்கி பரிசோதித்த போது அதில் வாலிபரின் படுக்கை அறையை படம் பிடித்த காட்சிகள் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி வெளியில் சொல்ல கூடாது என்று அப்போது அந்த வாலிபரிடம் கூறிய கார்த்திக் அவ்வாறு சொன்னால் அந்தக் காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர் இது பற்றி பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கார்த்திக்கை கைது செய்தனர். அவர் நிலத்தரகர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் பாலக்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment