நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கும் ராதாபுரம் பகுதியை சேர்ந்த 27 வயது கார் டிரைவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று இவர்களது திருமணம் மணமகள் வீட்டில் வைத்து நடைபெற இருந்தது. இருதரப்பினரும் தடல்புடலாக திருமண ஏற்பாடுகளை நடத்தி வந்தனர்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மணப்பெண்ணை ஒரு இளம்பெண் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது மணமகனுக்கும், தனக்கும் நீண்டகாலம் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண் உடனே மணமகனை செல்போனில் தொடர்புகொண்டு நடந்த விவரத்தை கூறியுள்ளார். ஆனால், அந்த பெண் தனக்கு தங்கை மாதிரி. அவளுடன் அப்படித்தான் பழகினேன் என்றார்.
இதை ஏற்க மறுத்த மணமகள், அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டிக்குமாறு கூறினார். ஆனால் மணமகன், அந்த பெண்தான் தனக்கு மிகவும் முக்கியம், அவளுடன் தொடர்பை கைவிடமுடியாது என்றார்.இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகள் செய்வதறியாமல் திகைத்தார். இந்த திருமணத்தில் விருப்பமில்லை என மணமகள் தனது பெற்றோரிடம் கூறினார். அவர்களும் இதைக்கேட்டு செய்வதறியாமல் புலம்பினர்.
இந்த குழப்பத்திலேயே திருமணம் நடைபெற இருந்த நாளும் வந்தது. நேற்று காலையிலேயே மணமகன் வீட்டில் இருந்து அனைவரும் வந்தனர். மணமேடையில் மணமகன் அமர்ந்திருந்தபோது, மணப்பெண் ஒருவித குழப்பத்துடனேயே அருகில் வந்து அமர்ந்தார். அப்போது மணமகன் தாலியை கையில் எடுத்த நேரத்தில், திடீரென இளம்பெண் தனக்கு இந்த மணமகனை பிடிக்கவில்லை. திருமணத்தை நிறுத்துங்கள் என்றார்.
இதைக்கேட்டு மணமகன் உள்பட அனைவரும் ஒரு நிமிடம் நிலைகுலைந்தனர். என்ன நடந்தது? ஏன் திருமணத்தை நிறுத்துகிறாய்? என மணமகளிடம் கேட்டனர். அப்போது, அவர் மணமகனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. எனவே, நான் இவரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என மணமகள் கூறினார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே அங்கிருந்தவர்கள் திசையன்விளை போலீசாருக்கு தகவலளித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மணமகனை திருமணம் செய்ய மாட்டேன் என்பதில் மணமகள் உறுதியாக இருந்ததால் வெறு வழியின்றி திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் மணமகன் வீட்டார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். தாலிகட்டும் நேரத்தில் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment