இரும்பு ராடால் திருநங்கையை அடித்து கொலை செய்த வாலிபர்

 


சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி ராணி. பூ கட்டும் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் கடைசி மகன் சரவணன் கடந்த மே மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறி தனது பெயரை வனிதா என மாற்றிக் கொண்டார். மேலும் அவர் வடக்கு ரயில்வே லைன் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கினார்.


நேற்று காலை 9 மணிக்கு வனிதாவின் வீட்டிற்கு அவரது அக்கா மரகதம் சென்று பார்த்தார். அப்போது முகம் துணியால் மூடப்பட்டு இரத்த காயங்களுடன் வனிதா கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு கதறி அழுதார். அவரது வாய்க்குள் துப்பட்டா அமுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வனிதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.


இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அதாவது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த நவீன் என்ற வாலிபருக்கும் வனிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி ஒன்றாக தங்கி உள்ளனர். தான் சம்பாதிக்கும் பணத்தை வனிதா நவீனிடம் கொடுத்து வைத்ததாக தெரிகிறது.


நேற்று முன்தினம் இருவரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்தனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த நவீன் இரும்புராடால் வனிதாவை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தால் தான் உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments