நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பிரதமர், முதல்-அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரை நீக்கும் மசோதா உள்பட 14 அரசு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் முக்கிய மசோதாவும் அடங்கும்.
இதேபோன்று, பிரதமர், முதல்-அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால், அவர்கள் பதவியை இழக்க நேரிடும் வகையிலான 130-வது திருத்த மசோதா அவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன.
2014-ம் ஆண்டு பிரதமர் மோடி பதவிக்கு வந்தது முதல் கடந்த 11 ஆண்டுகளாக, மத்திய அமைப்புகளால் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரான விரோத மனப்போக்கு தொடர்ந்து வருகிறது. பதவியிலுள்ள முதல்-அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன என எதிர்க்கட்சிகளால் குற்றச்சாட்டாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர், முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இன்று அளித்த பேட்டியில் உறுதியாக கூறியுள்ளார்.
அது நிறைவேற்றப்படும் என நான் உறுதியாக கூறுகிறேன். காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் நல்லொழுக்கம் மற்றும் நீதிநெறி ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்று கூறியுள்ளார். இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பர் என அவர் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, நாடாளுமன்றம் எப்படி செயல்படும் என ஆளுங்கட்சி மட்டுமே தனியாக முடிவு செய்ய முடியாது. எந்தவொரு மசோதா அல்லது அரசியல் சாசன திருத்தத்திலும் எதிர்க்கட்சிகள் ஆரோக்கியம் நிறைந்த விவாதத்தில் ஈடுபட வேண்டும். அந்த சூழலை உருவாக்க எதிர்க்கட்சிகள் தவறினால், இந்த நடைமுறை சரியா? இல்லையா? என நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள்.
இந்த மசோதா நிறைவேறாத சூழலில், அதனை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்புவது என முடிவு செய்தோம். அரசும் இதனை முன்பே முடிவு செய்திருந்தது. இதன்படி, நாடாளுமன்ற மக்களவையின் 21 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையின் 10 உறுப்பினர்கள் என இரு அவைகளை சேர்ந்த மொத்தம் 31 உறுப்பினர்கள் இந்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம் பெறுவார்கள் என கூறியுள்ளார்.
இதனால், எதிர்க்கட்சிகள் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து அமித்ஷா கூறும்போது, ஒரு முதல்-அமைச்சரோ, பிரதமரோ அல்லது எந்தவொரு தலைவரோ சிறையில் இருந்து கொண்டு நாட்டை வழிநடத்த முடியுமா? என ஒட்டுமொத்த நாட்டையும், எதிர்க்கட்சியையும் பார்த்து நான் கேட்க விரும்புகிறேன்.
நம்முடைய ஜனநாயகத்தின் கண்ணியத்திற்கு அது ஏற்ற ஒன்றா? என அவர் கேட்டுள்ளார். பிரதமர் மோடி அவருக்கு எதிராகவே கூட இந்த அரசியல் சாசன திருத்தத்தினை கொண்டு வந்துள்ளார். அவர் ஒருவேளை சிறைக்கு சென்றால், அவரும் கூட பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என அமித்ஷா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment