கவின் ஆணவக்கொலை..... தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
திருநெல்வேலி: நெல்லையில் ஜாதி ரீதியாக கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் சம்பவம் தொடர்ந்து அதிர்வலை ஏற்படுத்தி வரும் நிலையில், அவரது தந்தை சந்திரசேகருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின் கடந்த ஜூலை 27ஆம் தேதி திருநெல்வேலியில் சுர்ஜித் என்பவரால் கொலை செய்யப்பட்டார். சுர்ஜித் தனது சகோதரியை கவின் காதலித்ததாக கூறி, ஜாதி ஆணவத்தால் இந்த கொலை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை விவகாரத்தில் சுர்ஜித்தின் தந்தை சிறப்பு இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்யப்பட்டார். அவரது மனைவி கிருஷ்ணகுமாரி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவாகும் வரை பிரேதத்தை பெற்றுக்கொள்ள மறுத்த கவின் குடும்பத்தினர், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு, உடலை பெற்றனர்.
இந்நிலையில், ஆணவக் கொலையில் நேரடியான பாதிப்பை சந்தித்திருக்கின்ற சந்திரசேகருக்கு எதிராக மிரட்டல் இருந்ததைத் தொடர்ந்து, அவரின் பாதுகாப்பிற்காக அரசு துப்பாக்கியுடன் கூடிய போலீஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளது.
No comments