திருப்பதி பிரம்மோற்சவ விழா..... வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி முரளிகிருஷ்ணா தலைமையில் திருமலையில் உள்ள அன்னமய பவனில் பாதுகாப்பு, கண்காணிப்பு, தீயணைப்பு சேவைகள் மற்றும் சிறப்பு பாதுகாப்புப்படை அதிகாரிகளுடன் ஆயத்தக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் முரளிகிருஷ்ணா பேசும்போது, கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், பொதுவான கட்டளை கட்டுப்பாட்டு அறை மூலம் திருமலையின் ஒவ்வொரு பகுதியிலும் தொடர்ச்சியான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
பிரம்மோற்சவ விழாவின்போது ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு பட்டு வஸ்திரங்களை வழங்கும் நாளில் அவர் திருமலைக்கு வருகை தருவதைக் கருத்தில் கொண்டு, வலுவான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் பெரிய சேஷ வாகனம், கருட வாகனம், தேரோட்டம் மற்றும் சக்கர ஸ்நானம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளின்போது பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
பக்தர்கள் வாகனச் சேவையை தொந்தரவு இல்லாமல் தரிசனம் செய்ய வசதியாக, கேலரிகளில் முன்னேற்பாடுகள், நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளை ஒழுங்குப்படுத்த திட்டமிடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பிரம்மோற்சவ நாட்களில் அதிக வாகனங்கள் திருமலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பிரத்யேக பார்க்கிங் மண்டலங்களை ஏற்பாடு செய்யுமாறு பறக்கும்படை மற்றும் பாதுகாப்புத் துறைக்கு அறிவுறுத்தினார்.
No comments