ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதி, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அந்தியூர் ஏஜி வெங்கடாசலம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து முகாமில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏஜி வெங்கடாசலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி சாமானிய மக்களும் தரமான மருத்துவ சேவைகளை பெற வேண்டும் என்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீர்மிகு திட்டம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் போன்ற பல்வேறு சுகாதார திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த வரிசையில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ள மற்றொரு மருத்துவ சேவை சார்ந்த திட்டம் தான் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகள், பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நோய் கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகளும் மருந்துகளும் கூட இலவசமாகவே வழங்கப்படுகின்றன.
இதனால், கட்டணம் செலுத்தி மருத்துவம் பார்க்க வசதி இல்லாத ஏழை, எளிய மக்கள் பெரியளவில் பயனடைவார்கள். போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத இடங்களிலும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு முகாமின் போது பொதுமக்கள் எளிதாக புரிந்துக் கொள்ளும் வகையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், வயது, பாலினத்தை பொருட்படுத்தாமல் அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள், இதய நோய்கள், மனநலன் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவருமே இந்த முகாம்களை பயன்படுத்தி பலனைப் பெறலாம்.
மருத்துவம், பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், சிறுநீரக மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ சேவைகளும் மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த ஆலோசனைகளும் சிறப்பு மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படுகின்றனர்.
மேலும், பொது மருத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின் படி, எக்ஸ்-ரே, எக்கோகார்டியோகிராம், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், இரத்த அணுக்களின் எண்ணிக்கை, இரத்த சர்க்கரை, சிறுநீரக செயல்பாட்டு பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் அருணா ,அந்தியூர் பேரூராட்சி மன்ற தலைவர் எம். பாண்டியம்மாள் , பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி , வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் , மின்சார வாரிய அந்தியூர் உப கோட்ட உதவி செயற் பொறியாளர் அங்கப்பன் , போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் கஸ்தூரி , உதவி ஆய்வாளர் மெய்யழகன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .
No comments:
Post a Comment