புதுச்சேரி யூனியன் பிரதேசம் , காரைக்கால் மாவட்டம், ராஜாதி நகர், 3-வது மெயின் சாலையில், இலக்கம் 73-ல் , உடல் மற்றும் மன ரீதியான உபாதைகளுக்கு உள்ளான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியான சத்யா மறுவாழ்வு மற்றும் உள்ளடக்கம் மையத்தில், ஆகஸ்ட் 15ம் தேதி குழந்தைகளுக்கு விடுமுறை இருப்பதால், முன்கூட்டியே ஆகஸ்ட் 14ம் தேதி காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
பஜன்கோவா விவசாய கல்லூரி இணை பேராசிரியரும், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில தலைவருமான டாக்டர் எஸ். ஆனந்த்குமார் தேசியக் கொடியை ஏற்றி, கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார்.மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரவும், அவர்களின் பெற்றோர்களின் மனஅழுத்தத்தை போக்கும் விதமாகவும் சிறுவர், சிறுமியரின் அணிவகுப்பு, யோகா, கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அப்போது டாக்டர். எஸ். ஆனந்த்குமார் பேசுகையில், உடலும் மனமும் கூடிய உபாதைகளுக்கு உள்ளான மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பாதகங்களை சகிப்புத் தன்மையோடும் ஏற்புடைமையோடும் வாழ்வியலாக ஏற்றுக்கொண்டு, அவர்களை அரவணைத்து, பராமரித்து, பேணி, காத்து, அவர்கள் நிச்சயம் பூரண ஆரோக்கியம் பெறுவார்கள் என்ற அதீத நம்பிக்கையோடு கல்வியும் புகட்டி, வாழ்க்கையில் எதிர்நீச்சல் இட்டு வெற்றி கண்டு வரும் அந்த பெற்றோர்கள், இந்த சமூகத்தில் மூச்சூட்டும் ஊக்கமளிப்போர் என்றார்.
எனவே, மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களே உந்துதலூட்டும் பேச்சாளர்களாக, தேசியக் கொடி ஏற்றி சிறப்புரை ஆற்ற தகுதியானவர்கள் என்று பாராட்டினார். இவர்களை முக்கிய இலக்கு மக்களாக அரசு அணுக வேண்டும் என்றார்.
தொடர்ந்து ஆனந்த்குமார் பேசுகையில், அத்தகைய குழந்தைகள் யாருக்கும், நாட்டுக்கும் சுமையல்ல என்று அரசு, அவர்களுக்கு மதிப்பு கூட்டும் விதமாக மக்களுக்கு உரக்க உணர்த்த, உடல் மற்றும் மன ரீதியான உபாதைகளுக்கு உள்ளான ஒவ்வொரு மாற்றுத்திறனாளி குழந்தையின் ஆயுளை தலா இரண்டு கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்ய தேவையான தவணை கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்று, ‘ஊனம்’ என்ற களங்கத்தை அறவே சமூகத்தில் இருந்து வேரறுத்து புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றார்.
மேலும், அத்தகைய குழந்தைகளின் கல்வி, பிரத்தியேக பராமரிப்பு மற்றும் பாலியல் பாதுகாப்புக்காக மாதாந்திர உதவித் தொகையும் ஊக்கத் தொகையும் சேர்த்து ஐந்தாயிரம் ரூபாய் வழங்க, சமூக நீதி கொள்கையாக அரசு முன்வர வேண்டும் என்று, அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வலியுறுத்தினார்.
சிறப்பு கல்வி ஆசிரியர்கள் செல்வி கிஷோவுரி, திரு கார்த்திக் ராஜா, இயன் மருத்துவர் திரு பாரதி, உதவி ஆசிரியர் செல்வி நாகம்மா மற்றும் உதவியாளர்கள் திருமதி லதா, திரு. முருகன் ஆகியோர் குழந்தைகளுக்கு உரிய பயிற்சி அளித்து, பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.
முன்னதாக, அந்த சிறப்பு பள்ளித் திட்டத்தின் தலைவர் திரு ஷேக் ஷெரிப் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் இறுதியில், அப்பள்ளியின் உளவியல் நிபுணர் திரு. ராஜ்குமார் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment