• Breaking News

    கொடைக்கானல்: 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சுற்றுலா வேன் விபத்து...... 12 பேர் படுகாயம்




     ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவை சேர்ந்த 12 பேர், பாஸ்கரன் என்பவரது தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள், ஆன்மிக தலங்களை சுற்றி பார்ப்பதற்காக வந்தனர். நேற்று காலை அவர்கள், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு அவர்கள் கொடைக்கானல் செல்ல முடிவு செய்தனர். அதன்படி, ஒரு சுற்றுலா வேனில் பழனியில் இருந்து கொடைக்கானல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வேனை சென்னையை சேர்ந்த விக்னேசுவரன் என்பவர் ஓட்டினார்.

    மாலை 4 மணி அளவில் கொடைக்கானல் பேத்துப்பாறை பிரிவு அருகே வெள்ளைப்பாறை என்ற இடத்தில் சுற்றுலா வேன் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடியது. ஒருகட்டத்தில் சாலையோரம் இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு, 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. வேனில் வந்தவர்கள் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று அபயகுரல் எழுப்பினர். ஒரு மரத்தின் மீது மோதி வேன் நின்றது.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பள்ளத்தில் இறங்கி, வேனின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வேனில் வந்த மலேசிய சுற்றுலா பயணிகள் 12 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    No comments