தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ரவி பாண்டியன் மகன் சக்தி கணேஷ் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர் அதேபகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறொருவரை திருமணம் முடித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த சக்தி கணேஷ் வேலைக்கு சரிவர செல்லாமல் தனிமையிலேயே இருந்துள்ளார்.
மேலும் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் தனது நண்பரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால், நண்பர் போனை எடுக்கவில்லை. இதனால் அவருக்கு சக்திகணேஷ் வாட்ஸ்-அப் மூலம் ஆடியோவாக பேசி அனுப்பியுள்ளார். அதில் ‘‘அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் பார்ப்போம். உன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை. எதுவும் நினைத்துக் கொள்ளாதே. எல்லாம் முடிந்துவிட்டது, அவ்வளவுதான்.
நீ காலையில் போனை எடுத்து பார்க்கும்போது தனியார் கல்லூரி அருகே உள்ள தண்டவாளத்தில் இருப்பேன். என்னை வந்து பார்’’ என்று உருக்கமாக ஆடியோவில் பேசியுள்ளார். ஆனால் நண்பர் தூங்கிவிட்டதால் செல்போனை பார்க்கவே இல்லை. இதையடுத்து சக்தி கணேஷ் கோவில்பட்டி அருகே உள்ள பெத்தேல் ரெயில்வே கேட் அருகில் உள்ள தண்டவாளப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே சக்தி கணேசின் நண்பர் காலையில் செல்போனை எடுத்து பார்த்தபோதுதான், அவர் அனுப்பிய உருக்கமான ஆடியோவை கேட்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் சக்தி கணேசின் பெற்றோருக்கு தகவல் அளித்தார். இதன்பேரில் அவரது பெற்றோர் பதறியடித்துக்கொண்டு பெத்தேல் ரெயில்வே கேட் பகுதிக்கு சென்றனர். அங்கு சிதைந்து கிடந்த தனது மகனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.


0 Comments