• Breaking News

    சென்னை: மூடப்படாமல் இருந்த மழை நீர் வடிகால் பள்ளத்தில் பெண் சடலம் மீட்பு

     


    தமிழ்நாட்டில் மழை காலம் நெருங்குவதையொட்டி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் இப்பணிகளை முழுவதுமாக முடிக்க வேண்டும் என பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், பணிக்காக தோண்டப்படும் பள்ளங்களை பாதுகாப்பான முறையில் மூட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சில இடங்களில் பள்ளங்கள் முறையாக மூடப்படவில்லை என்று பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.


    இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கம் வீரபாண்டி நகர் 1-வது தெருவில் உள்ள மூடப்படாத மழைநீர் வடிகால்வாயில் பெண் ஒருவர் கிடப்பது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சூளைமேடு போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் கயிறு கட்டி உடலை மீட்டு கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


    அதில், சடலமாக மீட்கப்பட்டவர் சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த தீபா (வயது 42) என்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட பெண், மூடப்படாமல் இருந்த மழை நீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்ததில் தலை மற்றும் முகத்தில் அடிபட்டும், பள்ளத்தில் கிடந்த தண்ணீரில் மூழ்கியும் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தீபா இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


    இதற்கிடையே, அதிகாரிகளின் அலட்சியமே பெண்ணின் இறப்புக்கு காரணம் என கூறி அந்த பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த பகுதியில் மின்விளக்குகள் எரியாததால் பள்ளம் தெரியாமல் அந்த பெண் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, அரசு அதிகாரிகள் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பிறகே பொது மக்கள் கலைந்து சென்றனர்.


    இந்த நிலையில், உயிரிழந்த தீபாவின் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், பள்ளத்தில் விழுந்து நெற்றி பொட்டில் காயம் ஏற்பட்டதால் தீபாவின் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நள்ளிரவு 12.30 மணிக்கு பள்ளத்தில் விழுந்து, சுமார் 1 மணியளவில் உயிர் பிரிந்துள்ளது என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் சூளைமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments