சென்னையை அடுத்த நங்கநல்லூர் தில்லை கங்கா நகரை சேர்ந்தவர் மேகலாதேவி. இவர், பல்லாவரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நிலம் ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்த நிலத்துக்காக திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவுக்கு ஆன்லைன் மூலமாக பல்லாவரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பட்டா பெயர் மாற்றம் செய்ய மனு அனுப்பப்பட்டுள்ளது.
பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா கூறியபடி கிராம உதவியாளர் அமுதா என்பவர் மேகலாதேவியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதன் பிறகு பேரம் பேசி ரூ.12 ஆயிரம் கொடுத்தால் பட்டா பெயர் மாற்றம் செய்து தரப்படும் என கூறினார்.ஆனால் லஞ்சம் தர விரும்பாத மேகலாதேவி, இது தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் செய்தார். இதையடுத்து அவரிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.
அதன்படி நேற்று மேகலாதேவி அந்த பணத்தை சங்கீதாவிடம் லஞ்சமாக கொடுத்தார். அந்த பணத்தை அவர் வாங்கியதும் அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று சங்கீதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

0 Comments