சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாள் தோறும் 6 ஆயிரத்து 400 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவை பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பயோ மைனிங் முறையில் அகற்றப்படுகிறது. இதற்கிடையே, வீடுகளில் குப்பை சேகரிக்க செல்லும் ஊழியர்களிடம் சேதம் அடைந்த பழைய சேர்கள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் வழங்குகிறார்கள்.
இதை பெறுவதில் குப்பை சேகரிக்கும் பணியாளர்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர். இதேபோல, வீடுகளை காலி செய்யும் போது தேவையில்லாத கட்டில், சோபா, மர இருக்கை, பழைய துணி, கட்டில், மெத்தை படுக்கைகள், மின்னணு கழிவுகள் ஆகியவற்றை குப்பை தொட்டிகளில் வீசிவிட்டு செல்கிறார்கள். இதுகுறித்து மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் சென்றவாறு இருந்தது.
இந்த நிலையில், சென்னையில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் வீடுகளில் தேங்கிக் கிடக்கும் பயன்படுத்த முடியாத அல்லது தேவையற்ற பழைய பொருட்களைச் சேகரித்து அகற்றுவதற்கு ஒரு புதிய சேவையை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் வீடுகளில் உள்ள தேவையற்ற சோபா, படுக்கைகள், துணிகள் போன்றவற்றை வாகனங்கள் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்கள் மூலம் சேகரிப்பார்கள்.
இதற்காக 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். 9445061913 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், நம்ம சென்னை செயலியிலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை பதிவு செய்யலாம். இது சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்கப்படும்.
அதன்பின்னர், மாநகராட்சி ஊழியர்கள் தனி வாகனத்தில் கோரிக்கை வைத்த வீட்டுக்கு நேரடியாக சென்று தேவையற்ற பொருட்களை பெற்றுக்கொள்வார்கள். இதையடுத்து, சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாநகராட்சியால் பாதுகாப்பாக எரிக்கப்படும். சென்னையைத் தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.


0 Comments