பெரியகுளம் அருகே இரண்டு குழந்தைகளுடன் வைகை அணையில் குதித்து தந்தை தற்கொலை


 தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 37). இவரது மனைவி பிரியங்கா (30). இந்த தம்பதிக்கு தாரா ஸ்ரீ (7), தமிழிசை (5) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். கணவன், மனைவி இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கிருஷ்ணமூர்த்தி மன அழுத்த பிரச்சினைக்கு சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது 2 குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி, கிருஷ்ணமூர்த்தி வீட்டில் இருந்து வெளியே அழைத்து சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர்கள் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியங்கா தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து பிரியங்கா, பெரியகுளம் வடகரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை வைகை அணையில் 2 சிறுமிகள் பிணமாக மிதப்பதாக, வைகை அணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, 2 சிறுமிகளின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதற்கிடையில் 2 சிறுமிகள் வைகை அணையில்பிணமாக மீட்கப்பட்டது குறித்து வடகரை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் வடகரை போலீசார் மற்றும் பிரியங்காவின் உறவினர்கள் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு பிணமாக மீட்கப்பட்டது, மாயமான தனது மகள்களான தாரா ஸ்ரீ, தமிழிசை என்று பிரியங்கா உறுதி செய்தார். அவர்களுடைய உடல்களை பார்த்து அவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரின் கண்களை குளமாக்கியது. இதையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், கிருஷ்ணமூர்த்தி எங்கு சென்றார்? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின்பேரில், போலீசார் மற்றும் ஆண்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் வைகை அணை நீர்தேக்க பகுதியில் இறங்கி கிருஷ்ணமூர்த்தியை தேடினர். சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு கிருஷ்ணமூர்த்தியும் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கிருஷ்ணமூர்த்தி தனது குழந்தைகளுடன் வைகை அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments