திண்டுக்கல்: அஞ்சுவீடு அருவியில் குளித்த மருத்துவ கல்லூரி மாணவர் மாயம்

 


திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை மலைக்கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அஞ்சுவீடு அருவி உள்ளது. இந்த அருவியை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஆனால் அருவியில் குளிப்பதற்கும், அதன் அருகில் செல்வதற்கும் தடை இருக்கிறது. ஏனெனில் இந்த அருவி மிகவும் ஆபத்தானது. அதேபோல் அருவியின் தடாகத்தில் சுழல் உள்ளது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அருவியில் குளிப்பது, அதன் அருகில் நின்று புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்காரணமாக அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கோவையை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 11 பேர் நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் பேத்துப்பாறை அஞ்சுவீடு அருவிக்கு சென்றனர். அப்போது மாணவர்கள் சிலர் அருவியில் இறங்கி குளித்ததாக கூறப்படுகிறது. இதில், பொள்ளாச்சியை சேர்ந்த நந்தகுமார் (வயது 21) என்ற மாணவர் அருவியில் குளிக்கும்போது திடீரென மாயமானார். அவர் அருவியின் தடாகத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் இதுகுறித்து கிராம மக்களிடம் தெரிவித்தனர். அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் அருவியின் தடாக பகுதியில் மாணவரை தேடினர். ஆனால் இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீயணைப்பு படையினர் மூலம் மாணவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Post a Comment

0 Comments