திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, காதல் திருமணம் செய்தது குடும்ப மரியாதை போனதாக கருதிய மாமனார், தனது மருமகனை அரிவாளால் வெட்டி கொன்ற சோகம் நிகழ்ந்தது. பால் வியாபாரம் செய்து வந்த ராமச்சந்திரன் (24), கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் காதலித்த ஆர்த்தியை (21) திருமணம் செய்து கொண்டு, ராமநாயக்கன்பட்டியில் வசித்து வந்தார். இருவரும் வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் குடும்பத்தில் இருந்து கடும் எதிர்ப்பு நிலவியது.
தீபாவளியை முன்னிட்டு ‘தலை தீபாவளி’ என்ற பெயரில் உற்சாகமாக கொண்டாடத் திட்டமிட்ட தம்பதியருக்கு, அந்த நாளே துயர நாளாக மாறியது. நேற்று காலை பால் கறந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ராமச்சந்திரனை, மாமனார் சந்திரன் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தாம் கொண்டு வந்த அரிவாளால் திடீரென தாக்கியுள்ளார். ராமச்சந்திரன் தப்பித்து ஓட முயன்றும், சந்திரன் அவரது பின்னால் விரைந்து சென்று, ஓட ஓட அரிவாளால் வெட்டி கொன்றுள்ளார்.
இச்சம்பவம் நடந்த இடத்திலேயே ராமச்சந்திரன் உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்திரனிடம், தனது மகள் வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்தது தான் கோபத்திற்கு காரணம் என கூறியதாக தெரிகிறது.
0 Comments