தேனியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சிகள் பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

 


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில்  வாக்காளர்  பட்டியல்  சிறப்பு  தீவிர  திருத்தம் (Special Intensive Revision -SIR)   தொடர்பாக  மாவட்ட  ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங்  தலைமையில்   அனைத்து கட்சிகள் பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (Special Intensive Revision -SIR) மேற்கொள்ளுவதற்கான அறிவுரைகள், வழிகாட்டுதல்கள்களை வெளியிட்டுள்ளது. 

அதன்படி,  படிவங்கள் அச்சடிப்பு/ அதிகாரிகளுக்கு பயிற்சி  அக்டோபர்-28 முதல் நவம்பர்-03 வரையிலும்,  வீடு வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு நவம்பர் -04 முதல் டிசம்பர்-04 வரையிலும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுதல்                                         டிசம்பர்-09 அன்றும்,  ஆட்சேபனை தெரிவிக்க /திருத்தங்கள் கோர டிசம்பர் -09 முதல் 2026 ஜனவரி-08 வரையிலும்,  புகார்கள் சரிபார்ப்பு டிசம்பர்-09 முதல் 2026 ஜனவரி-31 வரையிலும்  மற்றும்  2026 பிப்ரவரி -07  அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல்  என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டத்தில் சிறப்பு தீவிரத்திருத்தமானது இந்திய தேர்தல் ஆணையத்தால் குறிப்பிட்டுள்ளபடி 04.11.2025 முதல் 04.12.2025 வரை அடையாள அட்டை அணிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இல்லம் தோரும் கணக்கெடுப்புப்படிவம் அனைத்து        வாக்காளர்களுக்கும்       விநியோகம்        செய்யப்படும்.     சம்மந்தப்பட்ட வாக்காளர்களால் விவரங்கள் பூர்த்திசெய்யப்பட்ட பின்னர் அதனை திரும்ப பெற்று அப்படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்து வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணியின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களும் இணைந்து செயல்படுவார்கள்.

இந்திய தேர்தல் ஆணையம் இதற்கு முன்னர் 1952-56, 1957, 1961, 1965, 1966, 1983-84, 1987-89, 1992, 1993, 1995, 2002, 2003 மற்றும் 2004  ஆகிய ஆண்டுகளில் நாடு முழுவதும் அல்லது சில பகுதிகளில் புதிய வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்க, தீவிர திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு (தகுதி நாள் 01.01.2002) வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் நடத்தப்பட்டது.கடந்த 23 ஆண்டுகளில், வாக்காளர் பட்டியலில் பெருமளவிலான சேர்த்தல் மற்றும் நீக்கல்கள் நிகழ்ந்துள்ளன. கல்வி, வாழ்வு மற்றும் பிற காரணங்களால் மக்கள் அடிக்கடி இடம் மாறுவதும், நகரமயமாதலும் பொதுவான ஒன்றாகி விட்டது. பலர் புதிய இடங்களில் பதிவு செய்து, முன்பு குடியிருந்த இடத்தில் பெயரை நீக்காமல் இருத்தல். இதனால் மறுபடியும் பெயர்கள் இடம்பெற வாய்ப்பு அதிகரித்துள்ளது. எனவே, ஒவ்வொருவரையும் சரிபார்க்கும் தீவிர சரிபார்ப்பு நடவடிக்கை அவசியமாகிறது.

மேலும் 2002 சிறப்பு தீவிரத்திருத்த வாக்காளர் பட்டியலானது https://theni.nic.in மற்றும்  https://elections.tn.gov.in  ஆகிய  இணையதளத்தில்  PDF பதிவேற்றம் செய்து வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.   மேலும், வாக்காளர்கள் பதிவேற்றம் செய்து https://erolls.tn.gov.in/electoralsearch/  என்ற இணைப்பு வாயிலாக  தங்கள் விவரங்களை உள்ளீடு (Search) செய்து அறிந்து கொள்ளலாம்.  வாக்காளர்கள் கணக்கடுப்பு படிவங்களை https://voters.eci.gov.in/ என்ற வலைதளம் மூலமாகவும் (ஆன்லைன்) பூர்த்தி செய்யலாம்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்த கணக்கெடுப்புப்பணிகள் மிகவும் எளிமையான முறையில் மேற்கொள்ளப்பட உள்ளதாக ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தம் குறித்து வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தகவல் மேஜை (HELP DESK) அமைக்கப்படவுள்ளது. 

மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்திலும்,  1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.

எனவே,  வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தினை பூர்த்தி செய்ய ஏதுவாக பொதுமக்கள் தங்களுடைய சுய விவரம் அடங்கிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை தயாராக வைத்து  வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில்  பெரிகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன்,  தேர்தல் வட்டாட்சியர் செந்தில்குமார்  மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments