ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ளக்கூடிய அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை உத்தரவு உள்ளதால் குருபூஜை விழாவிற்கு வாடகை வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்களிலும், சரக்கு வாகனங்களிலும், நடைபயணமாகவும் பசும்பொன் வர அனுமதி கிடையாது. தலைவர்கள் செல்லும் வாகனத்துடன் 3 வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும்.
சொந்த வாகனங்களில் மட்டுமே வர வேண்டும். இவ்வாறு வருபவர்கள் வாகனத்தின் பதிவு ஆவணம், ஓட்டுனர் உரிமம், வண்டியில் வருபவர்களின் விவரம் ஆகியவற்றை சமர்ப்பித்து அந்தந்த பகுதியில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் அனுமதி பெற்று அந்த அனுமதி சீட்டை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டி இருக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு மட்டும் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்காக அரசியல் கட்சியினர் நாளைக்குள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வாகனத்தில் ஒலிபெருக்கி, சாதி மத உணர்வுகளை தூண்டும் வாசகங்களுடன் பேனர்கள் இருக்கக் கூடாது. வாகனத்தில் வரும்போது கோஷங்களை எழுப்பக் கூடாது.
சொந்த வாகனத்தை வாடகைக்கு விடக்கூடாது. வாகன தணிக்கையின் போது அதன் உரிமையாளர் இருக்க வேண்டும். வாகனங்களில் மதுபானங்கள், ஆயுதங்கள் எடுத்து வரக்கூடாது. வாகன கூரையின் மீது பயணம் செய்யக் கூடாது. போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை வழியில் நிறுத்தக்கூடாது. அனுமதி பெறாத வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும். வருகிற 29, 30-ந் தேதிகளில் கமுதிக்கு கூடுதல் பஸ் வசதி செய்யப்படும்.
கிராமத்தினர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து அஞ்சலி செலுத்த வரலாம். அலங்கார ஊர்தி அணிவகுப்பு, சாதி தலைவர் வேடமிட்டு வருதல், மாட்டு வண்டியில் வருதல், ஜோதி ஓட்டம் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 29-ந்தேதி மட்டும் கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி பெற்று கமுதி மற்றும் அபிராமத்தில் இருந்து பசும்பொன் வரை ஜோதி, முளைப்பாரி, பால்குடம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படி பிளக்ஸ் போர்டுகள் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. நெடுஞ்சாலைகளிலும் பேனர்கள், கொடி, தோரண வளைவு அமைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் 30-ந்தேதி மட்டும் கிராமங்களில் படத்திற்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும். மாவட்டத்தின் எந்த இடத்திலும் ஒலிபெருக்கி வைக்க அனுமதி இல்லை. இந்த கட்டுப்பாடுகள், நெறிமுறைகளை மீறினால் சம்பந்தப்பட்ட ஒலிபெருக்கி, இசைக்கருவிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு தடையை மீறி வாடகைக்கு வாகனங்களை விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். கிராமங்களில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடுபவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் அனுமதி பெற்று விதிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும். வரும் வழியில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மற்ற வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது.
அன்னதானக்கூடம் அமைப்பவர்கள் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடம் அனுமதி பெற்று, அன்னதானக்கூடம் அமையவுள்ள இடம் தணிக்கை செய்யப்பட்டு இருக்க வேண்டும். அன்னதானக்கூடத்திற்கு அமைக்கப்படும் பந்தல்களுக்கு உறுதிதன்மை சான்றிதழ், மின்சாரத்துறையினரிடம் மின்னழுத்த நிலைத்தன்மை சான்றிதழ் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட துறையினரிடம் பெறவேண்டும்.
மேலும் அன்னதானப்பந்தல்கள் அமையவுள்ள இடத்திற்கு முன்பாக வாகன நிறுத்தும் இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். அன்னதான நிகழ்ச்சியில் வழங்கப்படும் உணவுகளை, உணவு கட்டுப்பாட்டு துறையினர் மூலம் பரிசோதனை செய்த பின்னரே பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments