தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், சென்னை எழும்பூரில் நடந்தது. சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ராதாரவி, எஸ்.வி.சேகர், செந்தில், தேவையானி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இதில் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அப்போது தயாரிப்பாளரும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் சங்கத்தில் விஷால் தலைவராக இருந்தபோது ரூ.8 கோடி வரை வைப்பு நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது எழுந்த விவாதத்தில், தேவைப்பட்டால் நானே விசாரிக்க தயார் என்று அவர் கூறியதை தொடர்ந்து, எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலேயே விசாரணைக்குழு அமைத்து ஒப்புதல் தரப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:-
* திரைப்படங்களில் நடித்துக்கொண்டு ஒப்பந்தங்களுக்கு மாறாக ஓ.டி.டி. வெப் தொடர்களில் நடிக்கும் நடிகர்களுக்கு இனி ஒத்துழைப்பு வழங்குவது இல்லை. அவர்களின் படங்களை தியேட்டர்களில் வெளியிடவும் கூடாது.
* மற்ற மாநிலங்களில் உள்ளது போல நடிகர்கள் 'வியாபார பங்கீட்டு முறை' (ரெவின்யூ ஷேர்) அடிப்படையில் நடிக்க வேண்டும். தயாரிப்பாளர்களின் லாப, நஷ்டங்களில் பங்கு கொள்ள வேண்டும்.
* பல்வேறு சங்கங்களுடன் தயாரிப்பாளர் சங்கம் போட்டிருக்கும் ஒப்பந்தங்களை மீறி செயல்படும் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை பாயும்.
* ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவை அரசு ஏற்று நடத்திட வேண்டும்.
* விமர்சனம் என்று வரம்பு மீறி செயல்படும் யூடியூப் சேனல்கள் மீது சட்டரீதியாகவும், திரைத்துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* முன்னணி நடிகர்களின் படங்கள் 8 வாரங்கள் கழித்தும், அடுத்தகட்ட நடிகர்களின் படங்கள் 6 வாரங்களுக்கு பிறகும் ஓ.டி.டி.யில் வெளியாக வேண்டும்.
* தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் அனுமதியுடன் தான் தனியார் அமைப்பின் விருது வழங்கும் விழா மற்றும் இசை நிகழ்ச்சி நடத்திட வேண்டும்.
* படத்தின் தலைப்புகளை பதிவு செய்வது சம்பந்தமாக மத்திய-மாநில அரசுகளுடன் பேசி, சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 Comments