நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி மேற்கு ஊராட்சிக்கு உட்பட்ட பிரதான கடைவீதி பேருந்து நிறுத்தம் அருகே கடந்த பத்து நாட்களாக வடியாமல் தேங்கி நிற்கும் மழைநீர், குட்டை போல காட்சி அளித்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். டிட்வா புயலைத் தொடர்ந்து பெய்த கனமழையால் நிரம்பிய சிறுகுட்டை, அந்த பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் வெளியேறாமல் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது.
பிரதான சாலையே நீரில் மூழ்குவதால் வணிகர்கள், பேருந்து நிலைய பயணிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் நாள்தோறும் கடும் சிரமத்தில் இயங்குகின்றனர். நீர் தேங்கிய நிலையில் கொசுக்கள் அதிகரித்து, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இயல்பாக சில நாட்களில் வடிந்துவிடும் மழைநீர், இந்த முறை பத்து நாட்களாகவும் வடியாமல் நிலைமை மோசமடைந்ததற்கு சரியான வடிகால் அமைப்பு இல்லாமையே காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் நாக.அருட்செல்வன் கூறியதாவது:
“பத்து நாட்களாக தேங்கியுள்ள இந்த மழைநீர் அப்பகுதி மக்களுக்கு நேரடி சுகாதார அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உடனடியாக தீவிரமான வடிகால் சீரமைப்பு செய்யாமல் இப்படிப்பட்ட நிலை தொடர்வது ஏற்க முடியாதது.”
“மக்கள் அவதியை கருத்தில் கொண்டு, பேருந்து நிறுத்தம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் தேங்கியுள்ள நீரை உடனடியாக வடிக்க மாவட்ட நிர்வாகம், ஊராட்சி மன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
திருக்குவளை நிருபர் த.கண்ணன்



0 Comments