நாகை: திருக்குவளை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2500 ஏக்கரிலான இளம் தாளடி நெற்பயிர்களின் வேர் பகுதி அழுகி மிதப்பதாக விவசாயிகள் வேதனை


நாகை மாவட்டத்தில் இந்தாண்டு  ஒரு லட்சத்து 62 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தொடர் கனமழை காரணமாக விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.திருக்குவளை தாலுகாவிற்கு உட்பட்ட சுந்தரபாண்டியம், அனக்குடி, கீழவெளி, நாட்டிருப்பு, வல்லம், வடக்குப்பனையூர், தெற்குப்பனையூர், இறையான்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கருக்கும் மேல் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

குறுவை சாகுபடிக்கு பின்னர் மட்டும் 2,500 ஏக்கருக்கும் அதிகமாக தாளடி பயிர்கள் செய்யப்பட்ட நிலையில், அண்மையில் பெய்த தொடர் கனமழை காரணமாக அனைத்துப்  நிலங்களும் நீரில் மூழ்கிப் போனது.

 விளைநிலங்களில் தேங்கிய நீர் நீர் பெருமளவு வடிந்த  போதிலும், பத்து நாட்களுக்கு மேலாக  நெற்பயிர்கள் சூழ்ந்துநின்ற நீர், வேர்ப்பகுதி அழுகச் செய்து பயிர்கள் மிதக்கத் தொடங்கியுள்ளன.விதைத்து 10 நாள்களே ஆன இளம் நெற்பயிர்கள் முழுமையாக  வளராத நிலை ஏற்பட்டுள்ளதால், இந்தப் பயிர்கள் மீண்டும் வளர வாய்ப்பே இல்லையென விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இதனை கருத்தில் கொண்டு வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாக  பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும், தற்போதுள்ள டிஜிட்டல் கணக்கெடுப்பு முறையால் முழுமையான சேதத்தை சரியாகப் பதிவுசெய்ய முடியாது என வேதனை தெரிவிக்கும்  விவசாயிகள் பழைய முறைப்படி சேதக்கணக்கெடுப்பு நடத்தி, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.முற்றிலுமாக சேதமடைந்த விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல் மற்றும் உரம் வழங்கவும் அவர்கள் கேட்கின்றனர்.இதேபோல், ஜனவரி இறுதியில் மூடப்படவுள்ள மேட்டூர் அணையை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோருகின்றனர்.

 இதன்மூலம் மட்டுமே மறுசாகுபடி செய்து குறைந்தபட்சமாவது மகசூல் பெற முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments