விருத்தாசலத்தில் சீமான் காரை வழி மறித்ததாக கூறி அவரது கட்சியினர் தி.மு.க., நிர்வாகியை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம், கோ.பொன்னேரி புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை மாநாடு நேற்று நடந்தது.இதில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இரவு 7:10 மணியளவில் மேடையில் இருந்து இறங்கிய சீமான், காரில் புறப்பட்டார். அப்போது, கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., வர்த்தக அணி அமைப்பாளர் ரங்கநாதன், சீமான் காரை வழிமறித்தாக கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த சீமான் கட்சியினர் 25க்கும் மேற்பட்டோர் திரண்டு, ரங்கநாதனை சரமாரியாக தாக்கினர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. போலீசார், 10 நிமிடங்களுக்கு பின் ரங்கநாதனை மீட்டு, அவரது காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சீமான் காரை மறித்து தாக்குதல் நடத்த முயன்ற தி.மு.க.,வினரை கைது செய்ய வேண்டும் எனகூறி, நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, இன்ஸ்பெக்டர் பிரதாப் சந்திரன் தலைமையிலான போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தி.மு.க., நிர்வாகி மீது, சீமான் கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம், விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments