அனுமதி மறுப்பு..... விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து

 


தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட விஜய்யின் த.வெ.க. தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக விஜய் ‘மக்கள் சந்திப்பு’ (ரோடு ஷோ) கூட்டம் நடத்தி வந்தார். தமிழ்நாட்டில் கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். அதனால், அவரது நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன. புதுவையில் கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற இருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் வருகிற 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) புதுச்சேரி காலாப்பட்டி முதல் கன்னியக்கோவில் வரை ‘மக்கள் சந்திப்பு’ என்ற பெயரில் ‘ரோடு ஷோ' நடத்தவும், சோனாம்பாளையம் சந்திப்பில் பொதுமக்கள் மத்தியில் பேசவும் அனுமதி கேட்டு த.வெ.க. சார்பில் புதுவை காவல்துறை தலைமை அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் கரூர் துயர சம்பவம் குறித்து ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி புதுவை காவல்துறை மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி மறுத்துவிட்டது.இந்தநிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் நேற்று முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, விஜய்யின் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டனர்.

இதனை தொடர்ந்து போலீஸ் ஐ.ஜி. அஜித்குமார் சிங்லா, டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் ஆகியோருடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது புதுவையில் விஜய் ரோடுஷோ நடத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் விளக்கினர். இதனை தொடர்ந்து புதுவையில் விஜய்யின் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுப்பது என முடிவு செய்யப்பட்டது.

ரோடுஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், 2 நாட்களில் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடு செய்வதில் சிக்கல் உள்ளது. எனவே புதுவையில் 5-ந்தேதி ஏற்பாடு செய்யப்பட்ட விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

வேறொரு நாளில் பொதுக்கூட்டம் நடத்த த.வெ.க. தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments