திமுக தமிழ்நாட்டில் என்ன செய்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி ஆவேச கேள்வி

 


நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, தமிழகத்தில் காந்தி, நேரு, போஸ் போன்ற வட இந்தியத் தலைவர்களுக்குப் பல இடங்களில் பெயர் சூட்டப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். அதேபோல், வட இந்தியாவில் வ.உ.சி, பாரதியார் போன்ற தமிழ் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் ஏன் சாலைகளுக்கோ அல்லது இடங்களுக்கோ வைக்கப்படவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார். 

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ள வ.உ.சி.யின் பேத்தி மரகதம் மீனாட்சிராஜா, “வட இந்தியாவில் பெயர் இல்லை என்று கவலைப்படும் திமுக, தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தபோது வ.உ.சி-க்கு என்ன செய்தது? எத்தனை பல்கலைக்கழகங்களுக்கு அல்லது நூலகங்களுக்கு அவர் பெயரை வைத்தீர்கள்?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், நாடாளுமன்றத்தில் சிலை வைக்கக் கிடைத்த வாய்ப்பில், வ.உ.சி-க்குச் சிலை வைக்காமல், சுதந்திரப் போராட்ட தியாகி அல்லாத முரசொலி மாறனுக்குத் திமுக சிலை வைத்தது ஏன் என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார். 

பிரதமர் மோடி வ.உ.சி-யின் பெயரைப் பெருமையுடன் குறிப்பிட்டதை வரவேற்ற அவர், வ.உ.சி எழுதிய ‘மெய்யறம்’ நூலைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற தனது நீண்ட காலக் கோரிக்கையைத் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸும் திமுகவும் வ.உ.சி-யின் புகழை மறைக்கப் பார்த்ததாகவும், காந்திக்குத் துதி பாடாததால்தான் வ.உ.சி வட இந்தியாவில் அறியப்படாமல் போனார் என்றும் அவர் தனது வீடியோவில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments