திருநெல்வேலியில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கௌரவித்த தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மு. அப்பாவு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பில்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள், ஒன்றிய அரசு ஒரு திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பே அதைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்திய வரலாறுகள் உண்டு. அதேபோல், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து, தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே வாக்குறுதி அளித்திருந்தார். ஆட்சிக்கு வந்தவுடன் அதில் சில மாற்றங்களோடு அதனைச் செயல்படுத்துவோம் என அறிவித்த முதல்வருக்கு, நானும் ஒரு ஆசிரியர் என்ற முறையில் ஆசிரியர்கள் சார்பாக நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
தமிழகத்தில் ஜனநாயகம் நசுக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஜனநாயகம் மிகச்சிறப்பாகச் செயல்படும் மாநிலம் தமிழ்நாடுதான். புதிதாக ஒரு கட்சியில் சேர்ந்தவர்கள் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படிப் பேசுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் யாரும் ஜனநாயகம் முடங்கியிருப்பதாகக் கருதவில்லை" என்று குறிப்பிட்டார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த சபாநாயகர், போதைப்பொருள் தடுப்பு குறித்துப் பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்:
2021-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்னால் நடைபெற்ற தென்மண்டல போதை ஒழிப்பு மாநாட்டில், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டனர். 2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் பயன்பாடு 1600 மடங்கு அதிகரித்திருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.தற்போது தமிழ்நாட்டில் பிடிபடும் 'கூல் லிப்ஸ்' போன்ற போதைப்பொருட்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுவதில்லை. சிறப்பாகப் படிக்கும் மாணவர்களைக் கொண்ட தமிழ்நாட்டின் எதிர்காலத்தைச் சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வெளிமாநிலங்களில் இருந்து இவை திட்டமிட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. "இவற்றை எங்கே தயாரிக்கிறார்கள் என்பது விமர்சனம் செய்பவர்களுக்கே தெரியும். இப்படிப்பட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறார். இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் செய்தியாளர்கள் அரசின் கவனத்திற்குக் கொண்டு வரலாம், அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
பள்ளிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக ஆசிரியர்கள் மீது வழக்குப் பதியப்படுவது குறித்த கேள்விக்கு, "அனைத்துச் சூழல்களிலும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. ஒரு சம்பவத்தின் தன்மை மற்றும் அதில் உள்ள குற்றப் பின்னணியைப் பொறுத்தே சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன" என்று விளக்கமளித்தார்..

0 Comments